ஈரோடு அருகே ஆம்னி வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பெண்கள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிவேகம், கவனக்குறைவு,குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் நிகழுகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சோளங்கபாளையம் அருகேயுள்ள முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த எட்டு பேர் ஆம்னி வேனில் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு இன்று(நவம்பர் 18) மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஈரோட்டைத் தாண்டி விளக்கேத்தியை அடுத்த பாரப்பாளையம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சிமெண்ட் லாரி வேனின் மீது திடீரென மோதியது. எந்த வாகனம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விபத்தில் ஆம்னி வேன் சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் வேன் ஓட்டுநர் படையப்பா, வேனில் இருந்த தெய்வானை, அருக்காணி, புவனேஸ்வரி, தேன்மொழி ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு டிஎஸ்பி மோகனசுந்தரம், சிவகிரி போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த குமரேசன், மோகன்குமார், முத்துசாமி ஆகிய மூவரும் ஈரோடு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லாரி ஓட்டுநர் மதுபோதையில் வண்டியை ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**-வினிதா**
�,