pஆம்னி பேருந்துகள்: விதிகளை மீறினால் சிறை!

Published On:

| By Balaji

பதிவுச்சான்று விதிகளை மீறி ஆம்னி பேருந்துகளை மாற்றம் செய்து இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையரகத்தில் ஆம்னி பேருந்துகள் பதிவுச்சான்றுக்குப் புறம்பாக வாகனத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக வாகனத்தின் நீளம், அகலம், உயரம், எடை, இருக்கை, படுக்கை அமைப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை மற்றும் பல மாற்றங்கள் குறித்தான புகார்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, ஆம்னி பேருந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் ஆம்னி பேருந்துகளைப் புதிய பதிவு மற்றும் மறுபதிவு செய்தபோது, பதிவுச்சான்றில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே வாகனத்தினை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதை மீறி மாற்றங்கள் செய்து இயக்கினால் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 52 மற்றும் பிரிவு 182(4)-ன் கீழ் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது ஆறு மாத சிறை தண்டனை அல்லது ஒவ்வொரு மாற்றத்துக்கும் 5,000 ரூபாய் அபராதமாகவோ அல்லது சிறை தண்டனை மற்றும் அபராதமும் ஆகியன இணைந்தும் விதிக்கப்படும்.

மேலும் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 207 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி எண் 421-ன் படி வாகனம் சிறை பிடிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது” என்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share