தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொது முடக்கத்திற்குப் பின் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து, பேருந்துகள் சேவைக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், குறைந்த எண்ணிக்கைகளுடன், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், தனியார் பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பேருந்துகளில் 100 சதவிகிதம் பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும். பேருந்துகள் ஓடாத மாதங்களில் செலுத்த வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்சை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளைப் பின்பற்றி, முதற்கட்டமாக 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்றும் பயணிகளின் வருகையைப் பொருத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகளுக்கு, அவை இயக்கப்படாத காலகட்டமான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களுக்குச் சாலை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்துகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, தீபாவளி பண்டிகைக்குச் சொந்த ஊர் செல்வதற்கு, அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
**-கவி**�,