சமூக பரவலான ஒமிக்ரான்!

Published On:

| By Balaji

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவல் ஆக மாறிவிட்டது என்று மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இன்சகாக்( INSACOG) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஒமிக்ரான் என்ற புதிய திரிபு மூலம் மூன்றாவது அலை பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புவரை கொரோனா தொற்று ஏறுமுகத்தில் இருந்தது. கடந்த 20 ஆம் தேதி 3.47 லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 3.37 லட்சமாக குறைந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3.33 ஆக குறைந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் இந்த எண்ணிக்கையும் ஆபத்தானதே.

மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நாட்டில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது. பல பெருநகரங்களில் ஒமிக்ரான் ஆதிக்கத்தால் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் பாதிப்புகள் இதுவரை அறிகுறி அற்றதாகவோ, மிதமானதாகவோ இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் இந்த வைரஸின் அச்சுறுத்தல் நிலை மாறாமல் இருக்கிறது.

அதனால் , இனிவரும் காலங்களில் நாட்டில் சமூக பரவல் காரணமாக ஒமிக்ரான் பரவுமே தவிர வெளிநாட்டு பயணிகளால் பரவாது.

ஒமிக்ரானின் மாறுபட்ட வகையான பி.ஏ.2 திரிபும் நாட்டில் கணிசமான பகுதியில் பரவி வருகிறது. இந்த வகையை பரிசோதனையின்போது கண்டறிவதில் சிரமம் உள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் தடுப்பூசி போன்றவைதான் கொரோனா தொற்றின் வைரஸின் அனைத்து உருமாற்றங்களுக்கும் எதிரான முக்கிய கவசங்களாகும்.

அதேபோல புதிதாகக் கண்டறியப்பட்ட மற்றொரு திரிபான பி.1.640.2 குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இந்த வகை வேகமாக பரவும் அல்லது நோய் எதிர்ப்புச் சக்தியில் இருந்து தப்பும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அதுபோன்று இது கவலைக்குரியதாகவும் பட்டியலிடப்படவில்லை. இந்த வகை கொரோனா இதுவரை இந்தியாவில் யாருக்கும் கண்டறியப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share