காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவரது தகவல் அடங்கிய இரண்டு பக்க குறிப்பேடு வழங்கப்பட்டுள்ளது, ’நமது பாபுஜி: ஒரு பார்வை’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட அந்த குறிப்பேட்டில் உள்ள தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டதால் தான் காந்தி இறந்தார் என்று வரலாறு கூறும் நிலையில், காந்தி ஒரு விபத்தில் இறந்தார் என்று அந்த குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா இல்லத்தில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தற்செயலாக நடந்த சம்பவத்தால் இறந்து போனதாகவும் விபத்து என்பது போலவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒடிசாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தவறை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள், இவ்விவகாரத்தில் அம்மாநில முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மகாத்மா காந்தியின் மரணம் ஒரு விபத்து என்று கூறி உண்மைகளைச் சிதைக்க மாநில அரசு முயன்றதாகக் கூறி, முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஒடிசா மாநில முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான நரசிங்க மிஸ்ரா, இந்த குறிப்பேட்டைத் திரும்ப பெறுவதுடன், முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். காந்தியை வெறுப்பவர்களை மகிழ்விக்கும் வகையில் பாடத்திட்டத்தில் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த தவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, நரசிங்க மிஸ்ரா, “தேசிய அளவில், நாதுராம் கோட்சேவை ஒரு ஹீரோவாக சித்தரிக்க முயற்சிகள் நடந்துள்ளன, அவரது சிலைகளை நிறுவி வழிபடுவது என்பது வெட்கக்கேடான விஷயம்” என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,