கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் கூடும் திருமணம் போன்ற விழாக்கள் கூட நோய் பரவும் பீதி காரணமாக தள்ளிப்போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான, நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி முதல் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது.
போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானில் அதிகமாக இருக்கிறது. தற்போது ஜப்பானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தற்போதைய நிலையில் திட்டமிட்டவாறு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியுமா என்னும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஜப்பானிய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியொன்றில், “உயிருக்கு ஆபத்தான நோய் பரவுகிறது என்பது உறுதியானால் போட்டியை தள்ளிவைப்பது அல்லது வேறு இடத்திற்க்கு மாற்றுவதை விட போட்டிகளை நிறுத்திவிடுவதே சிறந்தது” எனக்கூறியுள்ளார். கனடாவை சேர்ந்த முன்னாள் நீச்சல் வீரரும், இப்போதைய சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் உறுப்பினருமான டிக் பவுண்டு இது குறித்து கூறுகையில், “ இடைப்பட்ட இந்த குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளதாகவும், போட்டிகள் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பே மிகவும் அதிகமாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல்களை தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 172-ஐ தாண்டி விட்டது. ஜப்பானின் சீபா என்னும் இடத்தில் உள்ள ஒரு ஜிம்மில் மூவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு டோக்கியோவில் அமைந்திருக்கும் இந்த பகுதியில் தான் ஒலிம்பிக்ஸ் தொடரின் டேக்வாண்டோ, குத்துச்சண்டை, வாள்சண்டை ஆகிய போட்டிகள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் நடக்க இருந்த மற்ற விளையாட்டு போட்டிகளான ஜெ-லீக் என்று அழைக்கப்படும் கால்பந்து போட்டிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல போட்டிகள் ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்படுவது 2011-ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்கு பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு உதவி செய்வதற்காக சுமார் 80,000 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதாக இருந்ததும் இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
1896-லிருந்து நடத்தப்படும் இந்த மாடர்ன் ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை போருக்காக மட்டுமே நிறுத்தப்பட்டு இருக்கின்றன. 1940 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையேயான போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றால் நிறுத்தப்பட்டது. பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜிகா வைரஸ் பரவலின் போதும் திட்டமிட்டவாறு 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
**-பவித்ரா குமரேசன்**�,