இந்தியாவில் முதன்மையான தொழில் மட்டுமல்ல, அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் தொழில் விவசாயம். சமீப ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பட்டதாரி இளைஞர்களும் விவசாயத்தில் ஆர்வம்காட்டுவது அதிகரித்து வருகிறது. காரணம், விவசாயத் தொழில் மன நிறைவைத் தருகிறது என்கின்றனர்.
அந்த வகையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பரணிதரன் இயற்கை விவசாயத்தில் சிறப்பாகச் செயல்பட்டுச் சிறந்த விவசாயி என்ற விருதைப் பெற்றிருக்கிறார்..
அவர் நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் சுவாரஸ்ய தகவல்களை இச்செய்தியில் பார்க்கலாம்…
**1. நீங்கள் என்ன படிப்பு படித்தீர்கள்? என்ன வேலையில் இருக்கிறீர்கள்?**
படித்தது வேதிப்பொறியியல். கடந்த 23 ஆண்டுகளாக வேதிப்பொறியியல் சார்ந்த வேலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணியிலிருந்தேன். தற்போது அதே துறையில் பன்னாட்டு நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிகிறேன்.
**2. பொறியியல் படிப்பு, அயல்நாடு வேலை மற்றும் நல்ல வருமானம் – இவை இருந்தும் விவசாயத்தில் ஈடுபட்டது ஏன்?**
அடிப்படையான காரணம் அதீத ஆர்வம். மேலும், முறையான விவசாயம் செய்தால் பலன் உண்டு என்பதாலும், மிக்க மனநிறைவு கிடைக்கும் என்பதாலும் அலுவலகப் பணியை விடாமல் விவசாயத்திலும் ஈடுபட்டேன். அயல்நாடு வேலை நல்ல வருமானம் தரும் என்பது உண்மை என்றாலும், மன நிறைவு என்பது விவசாயத்தில் இருப்பதும் உண்மையே. இவ்வாறான கருத்து, இப்போது அநேக அயல் நாடு வாழும் தமிழர்களிடம் பெருகி வருகிறது.
**3. தற்போது தாங்கள் பெற்ற விருதினைப் பற்றி கூறுங்கள்…**
திருவண்ணாமலை மாவட்டத்தில் தலையாம்பள்ளம் கிராமத்தில் பண்ணை அமைத்து, தோட்டக்கலை பயிராகிய கொய்யா, வாழை மற்றும் பப்பாளி ஆகியவற்றைச் சாகுபடி செய்து வருகிறேன். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (Indian Council of Agricultural Research – ICAR) மற்றும் இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Horticulture Research – IIHR), பெங்களூரூவில் பிப்ரவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடத்திய தேசிய தோட்டக்கலை கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் இந்த ஆண்டின் சிறந்த விவசாயி விருதினை வழங்கினார்கள். புதுமையான உத்திகளையும் இயற்கை விவசாய முறையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியதால் இவ்விருது மத்திய அரசு நிறுவனமான ICAR -IIHR அளித்தது.
**4. விவசாயத்தில் அனுபவித்த ஏதாவது நெகிழ்வான சம்பவங்கள்?**
நிறையவே உண்டு. ஊரே கொரோனா அச்சத்தில் இருந்தபோது பண்ணையில் உடன் இருந்தோர் எவ்வித தயக்கமும் இன்றி பழங்களை அறுவடை செய்து சந்தைக்கு எடுத்து சென்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் வேலை செய்தனர். அப்போது பண்ணை மேற்பார்வையாளர் சங்கர் என்பவரிடம் “இரண்டு வாரத்திற்கு வேலையை நிறுத்திவிடுவோமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “நாம் இயற்கை முறையில் பயிரிட்டுள்ள கொய்யா நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருக்குன்னு சொன்னீங்க, அதனால இப்போதுள்ள கொடிய கொரோனா காலத்தில் மக்களுக்குக் குறிப்பாகக் கர்ப்பிணி, முதியோர், குழந்தைகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் நம் பழங்கள் மிகவும் முக்கியங்க… அதனால நம்ம வேலைய நாம பாப்போம், இந்த கொரோனா வரதுக்கு முன்னாடியே சாமியும் இருந்துச்சு, விவசாயமும் இருந்துச்சு, ரெண்டும் நம்மள காப்பாத்தும்” என்றார். நெகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும், ஒரு விவசாயிக்கு இருக்கும் ஒரு இயல்பான சிந்தனையும் அதுவே.
**5. விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உங்களது அறிவுரை?**
விவசாய ஆர்வம் உள்ளவர்கள் (Farming aspirants) இப்போது அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் அயல்நாட்டில் இருப்போர்கள் பலர் ஊர் திரும்பி விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் கொண்டுள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வரவேற்கத்தக்கது. என்றாலும், சில முக்கியமான விஷயங்களை ஆராய்ந்து, தெளிந்து பிறகு விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.
சரியான திட்டமிடல் (Proper planning), மண்ணுக்கும் நீருக்கும் ஏற்ற பயிரினைத் தேர்வு செய்தல் (Proper crop selection), செலவுகளை முன்கூட்டியே கண்டறிதல் (Budgetting), சந்தை படுத்துதலுக்கான யுக்தி அறிதல் (Marketing strategy), இயற்கை காரணிகளால் (மழை இன்மை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்) ஏற்படும் தாக்கம் போன்றவற்றை ஆராய்ந்து அதை எதிர் கொள்ளும் முறையினை முன்கூட்டியே வகுத்தல் (Proactive approach), விவசாயத்தில் உள்ள புதுமையான தொழில்நுட்பங்கள் உபயோகப்படுத்துதல் (Adoption of advanced farming technologies) போன்றவை நம்மை இழப்பிலிருந்து காக்கும்.
ஆர்வம் மட்டும் இருந்து தொடர்ந்து சறுக்கல்கள் இருந்தால் ஒரு நாள் விவசாயத்தினை விடவேண்டியிருக்கும். எனவே, மேல் சொன்ன விஷயங்களை உள்வாங்கி பிறகு விவசாயத்தில் ஈடுபட வேண்டும். விவசாயத்தில் வெல்வது என்பது பொருள் பணம் ஈட்டுதல் என்றில்லாமல் அதையும் தாண்டி மனநிறைவிற்காகவும், சமூக பயன்பாட்டிற்காகவும் என்பதாகக் கொண்டிருந்தால் என்றும் மகிழ்ச்சியே.
**தொடர்புக்கு: connectbarani@gmail.com**
�,”