நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி: அதிகாரிகள் ஆய்வு

Published On:

| By admin

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகளை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளி பயிரை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் நோய் தாக்குதலால் மரவள்ளி பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் சக்தியராஜ், தோட்டக்கலை அலுவலர் சக்திவேல் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ராஜேஷ், நித்தியா ஆகியோர் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மரவள்ளி பயிரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் செம்பேன் மற்றும் மாவு பூச்சியால் மரவள்ளி பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதைக் கட்டுப்படுத்த மரவள்ளி பயிரில் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி அசாடிராக்டினை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். பாதிப்பு அதிகம் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் தயாமித்தாக்சாமை 0.5 கிராம் வீதம் அல்லது பிலோனிக்கமைட் 0.3 மில்லி வீதம் அல்லது ஸ்பைரோடேட்ராமேட் 1.25 மில்லி வீதம் சுழற்சி முறையில் பயிரில் தெளிக்கலாம். இதன் மூலம் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும் என விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

**-ராஜ்-**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share