ஹாக்கி 2023 உலகக் கோப்பையை முன்னிட்டு ஒடிசாவில் நாட்டின் மிக பெரிய ஹாக்கி ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது.
2018ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலை அடுத்து உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் 2023 உலகக் கோப்பையை நடத்த ஒடிசா அரசு முன்வந்துள்ளது.
இதுபற்றி பேசியுள்ள ஒடிசாவின் விளையாட்டுத் துறை செயலாளர் வினீல் கிருஷ்ணா, “ஒடிசாவில் ஹாக்கி போட்டி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான எண்ணற்ற பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதற்காக புவனேஸ்வரில் கலிங்கா ஹாக்கி ஸ்டேடியத்தில் மேம்பாட்டுப் பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இதேபோன்று, சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் ஒன்று 20,000 இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைய உள்ளது. இது இந்தியாவின் மிக பெரிய ஹாக்கி ஸ்டேடியம் ஆக இருக்கும்.
இந்தக் கட்டுமானப் பணியில் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 250க்கும் கூடுதலானோர் பணியாற்றி வருகின்றனர். நடப்பு ஆண்டு அக்டோபருக்குள் ஸ்டேடியம் தயாராகி விடும்” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்-**
.