தான் முதல்வராவேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்ற நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று இரவு (நவம்பர் 17) நடைபெற்றது. அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், பிரபு, வடிவேலு, கார்த்தி, விஜய் சேதுபதி, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்திப் பேசினர். விழாவில் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேடையில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்குவதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதற்கான காசோலையை அவருடன் இணைந்து ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் வழங்கினர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, கமல்ஹாசன் என்னும் கலைஞன் அற்புதம் எனக் குறிப்பிட்டவர், அவருக்கும் தனக்குமான நட்பு உயிரோட்டமானது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினி,“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவர்கள், தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார். முதலமைச்சர் ஆன பின் அவருடைய ஆட்சி 4 நாட்கள் தாண்டாது, 5 நாட்கள் தாண்டாது, ஏன் அதிகபட்சமாக 5 மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும் என்று தமிழகத்தில் சொல்லாதவர்களே கிடையாது. அதிசயமும், அற்புதமும் நிகழ்ந்தது. ஆட்சி கலையவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும்” என்று தெரிவித்தார்.
தமிழக அரசியலில் சரியான தலைமைக்கான வெற்றிடம் உள்ளது என்று சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பேச, அதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ரஜினி ஒரு அரசியல் கட்சியின் தலைவரா? கட்சி ஆரம்பிச்சிருக்காரா? அவர் ஒரு நடிகர் மட்டும்தான். அரசியல் தலைவர்கள் யாராவது சொன்னால் பதில் சொல்லலாம். சம்பந்தம் இல்லாத ஒருத்தர் சொன்னா அதுபத்தி நாம ஏன் கவலைப்படுவானேன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடியாக முதல்வரை பாராட்டும் விதமாகவும் அதே சமயம் மறைமுகமாக விமர்சித்தும் பேசினார் ரஜினிகாந்த்.
தொடர்ந்து பேசிய ரஜினி, “கமல்ஹாசனின் பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு நடிப்பவர்களை என்னச் சொல்வது?. இந்த ரஜினிக்கே புரியும்போது எல்லோருக்கும் புரியும். எங்களுடைய நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்துகள் மாறலாம், நட்பு மாறாது. கமலுக்கும், எனக்குமான நட்பு உயிரோட்டமானது. அதை யாராலும் உடைக்க முடியாது” என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக பேசிய கமல்ஹாசன், “இந்த 60 வருட திரைப் பயணத்தில் முக்கியமானவர்கள் பலர். அதில், பாலச்சந்தர், ரஜினிகாந்த், கருணாநிதி, எம்.ஜி.ஆர், சந்தானபாரதி, ஷங்கர், சுஜாதா, அனந்து, ஜெமினி, கிரேசி மோகன், நாகேஷ், வி.கே.ராமசாமி, ஸ்ருதி, அக்ஷரா, அப்பா, அம்மா, தமிழர்கள் என இப்படி பலர். இவர்கள் எல்லோரும் எனது வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றியவர்கள்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “எங்களது சினிமா பாணி, சித்தாந்தங்கள் மாறலாம். ஆனால், நட்பு என்றும் மாறாது. 43 ஆண்டுகளாக காப்பாற்றிவிட்டோம். இனிவரும் காலங்களிலும் அதனை காப்பாற்றுவோம். அன்புதான் வாழும், அன்புதான் ஜெயிக்கும். எதிர்காலம் எங்களுக்கு என்ன வழங்கவிருக்கிறது என்று தெரியாது. ஆனால், நிகழ்காலத்தில் இருக்கும் எங்கள் அற்புதமான நட்பை நாங்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று ரஜினியுடனான தனது நட்பை வெளிப்படுத்தினார்.
�,”