தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் நடத்த முயன்றதாகக் கூறி வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 550 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வருகின்றன. அந்த வகையில் மே 17 இயக்கம் உள்ளிட்ட 13 அமைப்புகள் சார்பாக நேற்று (மே 20) 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.
மெரினாவில் எந்த நிகழ்வினையும் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான் பாகவி உள்ளிட்டோர் மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள பாரதி சாலையில் ஒன்று கூடி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
நினைவேந்தல் பேரணி காரணமாக பாரதி சாலை, நேப்பியர் பாலம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேரணியாகச் செல்ல முயன்ற 550 க்கும் மேற்பட்டவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை அவர்களை கைது செய்து ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்தது. பின்னர் ஒரு மணி நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தடையை மீறி மெரினாவில் நினைவந்தல் நடத்த முயன்றதாகக் கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான் பாகவி உள்ளிட்ட 550 பேர் மீது போக்குவரத்திற்கு இடையூறு, அனுமதியின்றி கூடுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் ஜாம்பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.�,