லஞ்சப் புகாருக்கு ஆளான சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வருமான வரித் துறை பரிந்துரை செய்தது. மேலும் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியது குறித்து அவரது தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து விஜயபாஸ்கர் பதவிவிலக வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆலந்தூரிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 3) திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், திமுக வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதற்கான, ஊழல் புரிந்ததற்காக பல்வேறு சான்றுகளை வருமான வரித் துறை கைப்பற்றியுள்ளது. அதில் சில முக்கிய ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி, விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. 20 கோடியே 75 லட்ச ரூபாய் பணத்தை விஜயபாஸ்கர் லஞ்சமாக பெற்றதற்கான ஆதாரங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பணம் எப்படி வந்தது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலத்தை விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பியே அளித்திருப்பதாகவும் வருமான வரித் துறை கூறியுள்ளது.
விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால், எவ்வித விசாரணையும் இதற்குத் தேவையில்லை. எனவே விஜயபாஸ்கர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத் துறை அவரைக் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் கைது செய்யவில்லை, இதுவே ஒரு மிகப்பெரிய குற்றம். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இம்மனுவைப் பெற்றவுடன் உடனடியாக விஜயபாஸ்கர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“விஜயபாஸ்கரின் சொந்த ஊரிலுள்ள அவருக்கு சொந்தமான கல் குவாரியில் 2லட்சம் கியூபிக் மீட்டர் எடுப்பதற்கு மட்டும்தான் அவருக்கு அனுமதியளித்து ஒப்பந்தம் கொடுத்துள்ளார்கள். ஆனால் 25 லட்சம் கியூபிக் மீட்டர் கற்கள் எடுத்ததற்குரிய ஆதாரங்களும் சுரங்கத் துறை மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீதான புகார்கள் விசாரணையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். எனவே முதல்வர், துணை முதல்வர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இதுதொடர்பாக நாங்கள் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுவோம்” என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.�,