கிண்டி பூங்காவில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கோடைக்காலத்துக்குள் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதுகுறித்து சென்னை கானுயிர் பாதுகாவலர் பத்மா கூறுகையில், கிண்டி பூங்காவில் பறவைகள் அடைக்கப்படும் எட்டு கூண்டுகள் வர்தா புயலில் சேதமடைந்துள்ளன. அதுபோன்று, சிங்கவால் குரங்குகள், குள்ளநரி, மான்கள் உள்ளிட்ட விலங்குகள் இருப்பிடம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.
பூங்காவில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கக் கோரி தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். கிட்டதட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, எங்களது கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து, சேதமடைந்த பகுதிகளை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. பாதுகாப்பு வேலிகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால், இதற்குப் பதிலாகப் புதிய வேலிகள் அமைக்கப்படும் என கூறினார்.
எந்த வித இடையூறும் இல்லாமல் பறவைகள் பறப்பதற்கு அதிக இடம் தேவைப்படும். ஆனால், கூண்டுகள் சேதமடைந்துள்ளதால் பறவைகள் சிறிய இடங்களில் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது பறவைகளுக்குப் பெரிய இடவசதி கொண்ட கூண்டுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், கோடைக் கால விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். அதனால், சீரமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என கூறினார்.�,