மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 19 மாணவர்கள், ஆறு மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அக்கல்லூரியின் முதல்வர் மருதுபாண்டியன்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமை நடப்பதாக, பாதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர்கள் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குப் புகார் அனுப்பினர். அதன் அடிப்படையில் அக்கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, ராகிங் தொடர்பான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதியில் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
“இந்த விசாரணையின் முடிவு, ராகிங் தடுப்பு கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இரண்டாமாண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் 19 பேர் ராகிங் பிரச்சினையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா மூலமும் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
ராகிங்கில் ஈடுபட்ட இரண்டாமாண்டு படிக்கும் 19 மாணவர்கள், ஓராண்டுக்கு விடுதியில் இருந்தும் ஆறு மாதங்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்படுகின்றனர். விடுதியில் தங்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நண்பர்கள் அறையில் தங்குவதோ, விடுதியில் சாப்பிடுவதோ கூடாது என்று இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இடைநீக்கம் தொடர்பான அறிக்கை டெல்லியில் உள்ள தலைமை ஆன்டி-ராக்கிங் கமிட்டி, மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது
ராகிங்கில் உடல் ரீதியாக யாரும் துன்புறுத்தப்படவில்லை. வார்த்தை ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். டீசர்ட் போடு, முழுக்கைச் சட்டை போடு, உட்கார்ந்து இரு என்பது போன்று ராகிங் நடந்துள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடராத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதியில் ஏற்கெனவே சிசிடிவி கேமராக்கள் மூன்று வைக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன” என்று அவர் கூறினார்.�,