oரயில் கொள்ளை: சிறையில் அடையாள அணிவகுப்பு!

Published On:

| By Balaji

சேலம் – சென்னை ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், புழல் சிறையில் உள்ள 7 கொள்ளையர்களை அடையாளம் காண நீதிபதிகள் சுப்ரஜா, ஆனந்தராஜ் தலைமையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று கொள்ளையர்கள் சேலம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, 5.78 கோடி ரூபாயைத் திருடினார்கள். இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக, கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேரைக் கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். இவர்களில் 5 பேரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில், கொள்ளையடித்த பணத்தைப் பங்கு பிரித்துச் செலவழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர் கொள்ளையர்கள். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 கொள்ளையர்களிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெற்ற சிபிசிஐடி போலீசார், எப்படிக் கொள்ளை நடைபெற்றது என்பது குறித்து செயல்முறை விசாரணையும் நடத்தினர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை வரும் 26ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், வரும் 16ஆம்(நேற்று) தேதி பாதுகாப்பான இடத்தில் குற்றவாளிகளிடம் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கியது நீதிமன்றம்.

இந்நிலையில் நேற்று புழல் சிறையில், 7 கொள்ளையர்களை அடையாளம் காணுவதற்காக நீதிபதிகள் சுப்ரஜா, ஆனந்தராஜ் தலைமையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, ரயில் கொள்ளையில் விசாரணை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசார், ரயில் கொள்ளையர்களை அடையாளம் காட்டக்கூடிய ரயில்வே அதிகாரிகள் மற்றும் டிக்கெட் பரிசோதர்களும் புழல் சிறைக்கு வந்தனர். இவர்கள் முன்னிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரையும் வரிசையாக நிற்கவைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share