oரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வரலட்சுமி

Published On:

| By Balaji

சமீபத்தில் வெளியான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ திரைப்படத்துக்குக் கிடைத்த ரசிகர்களின் ஆதரவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

லக்ஷ்மி, மா உள்ளிட்ட குறும்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த சர்ஜுன் இயக்குநராக அறிமுகமாகிய படம் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி சொல்லும் விதமாக, முதலில் எச்சரிக்கை போன்ற சிறிய படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பை அளித்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை தியேட்டரில் பார்த்து நேர்மையான கருத்துகளைத் தெரிவித்திருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரங்களோ, பெரிய இசையமைப்பாரோ இல்லை. இயக்குநரும் பிரபலமானவர் இல்லை; படமும் பெரிய பட்ஜெட் இல்லை. ரசிகர்களின் ஆதரவுதான் இந்தப் படத்தின் பலம். பணத்தைப் பற்றி கவலைப்படாமல் நல்ல கருத்துள்ள படத்தைச் சமுதாயத்துக்கு எடுத்துச் செல்ல பலர் இந்தப் படத்தில் கடினமாக உழைத்துள்ளனர். இதனை நன்கு புரிந்துகொண்டு நேர்மையான விமர்சனங்கள் வழங்கிய சில விமர்சகர்களுக்கும் நன்றி.

இந்தப் படம் ஓர் ஆண்டுக்கும் மேலாகப் படமாக்கப்பட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சினிமாவில் நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். விநியோகஸ்தர்களுக்கு இடையில் நடக்கும் அரசியல் வியாபாரங்களைக் கடந்து ஒரு படம் திரைக்கு வருவதில் ஏகப்பட்ட சிரமங்கள் உள்ளன. நல்லவேளை இந்தப் படத்துக்கு அப்படி ஒன்றும் நடக்கவில்லை. விமர்சகர்களின் வார்த்தைகளைக் கேட்டு யாரும் படத்தின் தரத்தை முடிவு செய்யாதீர்கள். நீங்கள் நேரில் சென்று படம் பார்த்து முடிவுக்கு வாருங்கள். ரசிகர்களாகிய உங்களால்தான் சினிமாவைக் காப்பாற்ற முடியும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share