அமமுகவை விட்டு யார் சென்றாலும் தலைமைக்கு இதயம் வலிக்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவின் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தினகரன், கட்சியை விட்டு நிர்வாகிகள் யாரும் செல்லவேண்டாமென்றும் விரைவில் நமக்கு நல்லகாலம் திரும்பும் என்று பேசி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
“சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வரவேண்டும். அம்மாவின் இயக்கத்தை மீட்க வேண்டும் என்பதுதான் என் இலட்சியம். அமமுகவுக்கு கிளைகள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். தேர்தல் தோல்வி என்பது நமக்கு நல்ல அனுபவம். அதனால்தான் தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தேன். 1989 இல் இருந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகிறேன். அம்மாவால் தேர்தல் பணி கொடுக்கப்பட்டு பணியாற்றியவன் என்ற முறையில் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் மனநிலை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறேன்.
இந்தத் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வருங்காலத்தில் அந்த சதியை முறியடித்து இந்த இயக்கத்தை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி அம்மாவால் முடியாத திட்டங்களையும் செயல்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற கடமை உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதுதான் என் இலக்கு.
இன்னும் 20 ஆண்டுகள் உழைக்கின்ற மன வலிமையையும், உடல் வலிமையையும் இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான். ஆண்ட கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் ஈடு கொடுத்து எல்லா வித ஆயுதங்களோடும் நாம் தேர்தலில் போட்டியிட்டோம். இதுபோல இன்னும் ஐந்து தேர்தலை சந்திக்கக் கூடிய சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறான். அதனால் யாரும் எதற்கும் பயப்படவேண்டாம்.
யாரையும் நான் வேண்டுமென்றே நீக்கமாட்டேன். மாவட்டச் செயலாளர் சொல்லியோ, மண்டலச் செயலாளர் சொல்லியோ நான் கேட்கமாட்டேன். அவர்களிடம் ஆலோசிப்பேன். ஆனால் முடிவு நான் தான் எடுப்பேன். எனவே நிர்வாகிகளுக்குள் மனக் கசப்பு வைத்துக் கொள்ள வேண்டாம். கட்சியை விட்டு யார் சென்றாலும் தலைமைக்கு இதயம் வலிக்கும். ஆனால் போகிறேன் என்று நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது.
கூட்டம் போடுவதற்கே மிகுந்த தடைகள் ஏற்படுத்துவதாக நிர்வாகிகள் கூறினார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது அவர் மீது கருணாநிதி ஆயிரக்கணக்கான பொய் வழக்குகளைத் தொடுத்தார். ஆனால் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் கருணாநிதி காணாமல் போனார். கருணாநிதி போன்ற தலைவருக்கே அதுதான் நிலைமை என்னும்போது, நேற்று அடித்த காற்றில் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. பதவி போய்விட்டால் இன்று யாருக்கு ஆணையிடுகிறார்களோ அந்த காவல் அதிகாரிகளே அவர்களை மதிக்க மாட்டார்கள். அம்மாவிடம் முப்பது வருடம் பயிற்சி பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன். காத்திருங்கள், நமக்குக் காலமிருக்கிறது” என்று சொல்லி முடித்தார் தினகரன்.�,