62 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (நவம்பர் 1) மொழிவழி மாநிலமாகத் தமிழகம் பிரிந்தது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு, மொழிவழி மாநிலங்கள் அமைந்திட வேண்டும் என்ற போர்க்குரல் நாடு முழுக்க வெடித்துக் கிளம்பியது.
மத்திய அரசு இதனை அனுமதிக்க மறுத்து, மாநில எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தது. அதன்படி தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என இந்தியாவை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று பரிந்துரைத்து மொழிவழி மாநிலம் என்ற கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்தது.
ஆனால், இதனை எதிர்த்து மொழிவழி மாநிலம் அமைய வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், சி.பா.ஆதித்தனார், பொதுவுடைமைச் சிற்பி ஜீவா, சங்கரலிங்கனார், கா.அப்பாத்துரையார், தமிழவேள் பி.டி.ராஜன், நேசமணி என எண்ணற்ற தலைவர்கள் ஓரணியில் திரண்டு போராடினார்கள். குமரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 18 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பிகார், ஒடிசா, மராட்டியம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என நாட்டின் பல மாநிலங்களிலும் மொழிவழி மாநிலக் கோரிக்கை வலுப்பெற்றுப் போராட்டமாக உருப்பெற்றது.
இவ்வளவு கடுமையான போராட்டத்துக்குப் பிறகு பெங்களூரூ, கோலார், திருப்பதி, சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, நெடுமங்காடு, நெய்யாற்றங்கரை ஆகிய பகுதிகளை அண்டை மாநிலங்களுக்கு நாம் பறிகொடுத்து, இந்திய அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு மொழிவழி மாநிலங்களை அறிவித்த நாள்தான் நவம்பர் 1.
**கன்னட ராஜ்யோத்ஸவம்!**
ஒவ்வொரு நவம்பர் 1ஆம் தேதியும் கர்நாடகத்தில் கன்னட ராஜ்யோத்ஸவ தினம் என இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கர்நாடக அரசு சார்பாக கன்னட ராஜ்யோத்ஸவ விருதுகளும் வழங்கப்பட்டுவருகின்றன. கன்னடக் கொடி, கன்னட தேவிக்கு வழிபாடு என்று அங்கே இந்நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று நவம்பர் 1ஆம் தேதி கர்நாடக முதல்வர் குமாராசாமியால் இவ்விருதுகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமன்ற, மக்களவை இடைத் தேர்தல் காரணமாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக நேற்று மாலை அறிவித்தார் முதல்வர் குமாரசாமி,
இனிமேல் முதல்வர் அலுவகத்துக்கு வரும் அனைத்துக் கோப்புகளும் கன்னட மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும் இல்லையேல் அந்தக் கோப்புகள் புறக்கணிக்கப்படும் என்றும் நவம்பர் 1 மொழிவழி மாநில தினத்தை ஒட்டி முதல்வர் குமாரசாமி அறிவித்திருப்பதாக கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல் போதாது; இதை அரசாணையாக வெளியிட வேண்டும் என்று கன்னட மொழி ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
**கேரள பிறவி தினம்**
மொழிவழி மாநில மலர்ந்த தினம் என்பது கேரளாவில் கேரள பிறவி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இயற்கைப் பேரிடரில் இருந்து மீண்டு எழுந்திருக்கும் நாம் கேரளாவை மீட்டெடுப்பது என்பது எளிதான இலக்கு அல்ல. இருந்தாலும் தோழமை, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றால் கேரளாவை மீட்டெடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.
இரு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் மொழிவழி மாநிலம் உருவான 60ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது அப்போது ஆளுநர் சதாசிவத்தை அந்த நிகழ்வுக்கே கேரள அரசு அழைக்கவில்லை என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
**அரசு விழா ஆகுமா?**
இந்த மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாளை கர்நாடக, கேரள மாநில அரசுகள் விழா எடுத்துக் கொண்டாடுகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த நிலைமை இல்லை.
“தமிழக அரசும் மொழிவழி மாநிலம் அமைந்த நாளை அரசு விழாவாகவே கொண்டாட வேண்டும்” என்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
அதேபோல, “பலநூறு ஆண்டுகள் நகர்ப்புற, நாகரிக வரலாறு படைத்தது தமிழகம் என்பதை கீழடி ஆய்வுகள் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. தமிழக அரசு, தமிழ் மாநிலம் உருவான இந்த நன்நாளை சிறப்பாகக் கொண்டாட முன்வர வேண்டும். பெருமைக்குரிய தமிழ் மொழி மத்தியில் ஆட்சி மொழியாக அரங்கேற்றப்பட வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டும் ஆங்கிலமே கோலோச்சும் நிலைமை உள்ளது. எனவே முழுமையான ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், உயர் நீதிமன்ற மொழியாகவும் உயர்த்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முக்கியமான கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
**வெளிநாட்டுத் தமிழர் நலத் துறை**
“அண்டை மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் பல லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் ஈட்டுகிற வருமானத்தால் இந்திய நாட்டுக்கு அந்நியச் செலாவணியாகப் பல ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துவருகிறது. ஆனால், அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழ்கிற சுமார் 50 லட்சம் தமிழ் மக்கள் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் எதுவுமில்லை. இதனால் இம்மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.
அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த உலகெங்கும் வாழும் மலையாள மக்களது பிரச்சினைகளையும், தேவைகளையும் ஈடுகொடுக்கும் வகையில் “வெளிநாடு வாழ் கேரள நலத் துறை” என்ற துறையினை உருவாக்கி கேரள அரசு இம்மக்களைப் பாதுகாத்துவருகிறது. இதுபோல் பஞ்சாபியர்களுக்கும் தனித் துறை செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்த அடிப்படையில் அண்டை மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் தனித் துறையினை உருவாக்கித் தமிழர்களை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.
**தமிழகத்தில் நெடுநோக்குப் பார்வை இல்லை!**
மொழிவழி மாநிலங்கள் பிறந்த இந்த நாளில், ‘பஞ்சாப் மஞ்ச்’ என்ற அமைப்பு சண்டீகரில் நடத்தும் தன்னாட்சி மற்றும் கூட்டாட்சி அரசியல் குறித்த சிறப்பு மாநாடு நடக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து கலந்துகொள்ளும் தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன் தமிழகத்தின் போக்கை விமர்சிக்கிறார். “இந்த நாளை கேரளம், கர்நாடகம் போன்றவை பெருமகிழ்வோடு கொண்டாட, தமிழ்நாடோ அன்றிலிருந்தே இந்நாளை புறக்கணித்தே வந்திருக்கிறது. அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும், நம்மை ஆண்ட, ஆள்கின்ற கட்சிகளுக்கு நெடுநோக்கிலான பார்வை இல்லாமல் போனதுதான் இந்த நாளை அங்கீகரிக்காதற்குப் பெரிய காரணம். ஆனாலும் அண்மைக் காலமாக இந்நாளின் முக்கியத்துவம் பேசப்படுகிறது என்பது வரலாற்றின் கட்டாயமாகியுள்ளது.
1956 நவம்பர் 1இல் இவ்வாறாக ஒரு தேசிய உருவத்தைக் கண்டடைந்த அரசுகள் – அதாவது மாநிலங்கள் – அனைத்துமே இன்று இந்த மொழிவழித் தேசிய அடையாளத்தைப் பெற்றதன் அடிப்படையையே இழந்து நிற்கின்றன. எதற்காக மொழிவழி தேச அடையாளத்தைப் பெற்றோமோ அந்த அடையாளங்கள் அழிக்கப்படுகின்ற நிலையில் நாம் இருக்கிறோம். இந்தி – இந்து – இந்துஸ்தான் என்கிற ஒற்றை அடையாளத்தின்கீழ் நம்மை ஒழிக்க முயல்கிற அந்த ஒற்றையாட்சி சக்திகளுக்கு எதிராக இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கிற மிகப்பெரிய வரலாற்று ஆயுதம் தேசிய இனங்களின் எழுச்சி மட்டுமே விடுதலையைத் தரவல்லது. அதுவும் கூட்டு எழுச்சியாக அது இருக்கவேண்டும்” என்கிறார் செந்தில்நாதன்.
ஜூன் 3 என்றால் கலைஞர் பிறந்த நாள், பிப்ரவரி 24 என்றால் ஜெயலலிதா பிறந்த நாள் என்று தனி நபர்களின் பிறந்த நாள்களை அறிந்தே பழக்கப்பட்ட தமிழகம், மொழிவழி மாநிலமாக உருவான நாளை அறியாமல் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிப் போராடிக்கொண்டிருக்கிறது.�,”