தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூன்று நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். முதல்வரின் இந்த பயண நோக்கம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது. தமிழகம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமரோடு விவாதிப்பது என்று கூறப்படுகிறது. தமிழகம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. நான்கு திக்கிலும் பிரச்சனை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின் ஒரு ஸ்திரமான ஆட்சி அமையவே இத்தனை காலம் பிடித்தது. அமைந்திருக்கும் இந்த ஆட்சி ஸ்திரமானதுதானா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியாத சூழலே தமிழகத்தில் தற்போதும் நிலவி வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை சரியோ தவறோ தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதில் பிடிவாதமாக இருந்தார். மத்திய அரசின் எந்தத்திட்டத்தை ஏற்க வேண்டும் எந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். அவரால் மத்திய அரசை எதிர்த்து போராட முடிந்தது. இணக்கமாக செல்ல வேண்டிய இடத்தில் இணங்கிச் செல்லவும் முடிந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் எதிர்தத பல திட்டங்களில் தமிழக அரசு இணைந்தது. இது குறித்து இன்றும் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்க அவருக்கும் மத்திய அரசிற்கும் ஒரு இசைவுத் தன்மை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. இது விமர்சிக்கப்பட்டாலும் தமிழக அரசை சுமூகமாக இயக்க அந்த இசைவு ஓரளவு பயன்பட்டது என்றே கூற வேண்டும். இந்நிலையில் தான் ஆட்சி மாற்றம் நடந்து எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்போது தமிழக அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையே உறவு எத்தகையது என்பதை தெளிவாக உணரமுடியாத குழப்பமான நிலையே நீடிக்கிறது. ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத போது, ஓ. பன்னீர்செல்வத்தை குற்றம்சாட்டிய சசிகலா தரப்பினர், மத்திய அரசை பெரிதாக விமர்சிக்கவில்லை. அந்தப் பணியை ஏனைய கட்சிகள்தான் செவ்வனே செய்தன. ஆளுநர் அழைப்பு விடுத்த பின்னர் அதிமுக எம்பி அன்வர் ராஜா, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை போன்றோர் மத்திய அரசை விமர்சித்தனர். இந்நிலையில் தான் பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் முன் சவால் மிகுந்த பிரச்சனைகள் குவிந்து கிடக்கிறன்றன. தமிழகம் எதிர்கொண்டுள்ள கடுமையான வறட்சி நிலை, வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பு, காவிரி, பவானி, பாலறு போன்ற நதிநீர் பிரச்சனை, தற்போது புதிதாக முளைத்துள்ள ஹைட்ரோ கார்பன் விவகாரம் என பெரும் பட்டியலே இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசின் ஆதரவும், நிதியும் தமிழகத்திற்கு மிக அவசியமான ஒன்று. இதை தமிழக முதல்வர் சமார்த்திமாகப் பிரதமரிடம் பேசி பெறுவரா என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.�,
Oமுதல்வர் பயணம் வெற்றி பெறுமா?
+1
+1
+1
+1
+1
+1
+1