oமுடிந்தது இழுபறி: அதிமுக அணியில் தேமுதிக!

Published On:

| By Balaji

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, திமுக என இரு தரப்பிலும் மாறி மாறி தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கடந்த ஒருவாரமாகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ஒருவழியாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தேமுதிக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேற்று தேமுதிக – அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதிமுக – தேமுதிக கூட்டணி தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் உள்ள ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேமுதிக தரப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. “2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், தேமுதிகவும் கூட்டணியமைத்து தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தலைச் சந்திக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது” என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.பழனிசாமியும், தேமுதிக தரப்பில் விஜயகாந்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் பிறகு இருகட்சியினரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக கூட்டணியில் உள்ள எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது அனைத்துக் கட்சிகளும் கலந்து பேசி ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும். தேமுதிகவும் அதிமுகவும் எப்போதுமே ஓர் உணர்வுபூர்வமான கூட்டணியாக இருக்கும்” என்றார்.

பிரேமலதா பேசுகையில், “அதிமுகவும், தேமுதிகவும் எப்போதுமே ஒரு மாபெரும் வெற்றிக் கூட்டணி. 2011இல் அதிமுகவும், தேமுதிகவும் இணைந்து கண்ட மிகப்பெரிய வெற்றியைப் போல இந்த மக்களவைத் தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி மகுடம் சூடும். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். பிரச்சாரப் பட்டியல் வெளியாகும்போது விஜயகாந்த் எந்தெந்த தொகுதிக்குப் பிரச்சாரத்துக்கு வருகிறார் என்பது வெளியாகும். திமுக கூட்டணி இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அதிமுக கூட்டணிதான் மக்களால் பரவலாகப் பேசப்படும் கூட்டணியாக இருக்கிறது” என்றார்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிற 39 வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே பாமகவுக்கு ஏழு, பாஜகவுக்கு ஐந்து, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் கூட்டணிக் கட்சிகளுக்கு இதுவரையில் 19 தொகுதிகளை அதிமுக கொடுத்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்படுமானால் திமுகவைப் போலவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் போக 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும். தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையவில்லை என்றால் திமுகவைக் காட்டிலும் கூடுதலாக ஒரு தொகுதியில் அதிமுக போட்டியிடும். இன்றோ அல்லது நாளையோ அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share