ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய 17ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே 19) மாலை 6.00 மணியோடு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரும் என்றும், ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்கும் என்றே கூறியுள்ளன. நேற்று வெளியான சில முக்கிய வாக்குக் கணிப்புகளையும், அவை தந்திருக்கும் முடிவுகளையும் காண்போம்.
**டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர்**
டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்பானது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற காலமான ஏப்ரல் 11 முதல் மே 19 வரையில் 3,211 இடங்களில் 40,000 பேருக்கும் அதிகமானோரிடம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 306 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 132 இடங்களிலும், மற்ற கட்சிகள் 104 இடங்களிலும் வெல்லும் எனக் கணித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 41.1 விழுக்காடு வாக்குகளையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 31.7 விழுக்காடு வாக்குகளையும், மற்ற கட்சிகள் 27.2 விழுக்காடு வாக்குகளையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. வாக்குச் சாவடியிலிருந்து வாக்களித்துவிட்டு வெளியே வந்த மக்களிடம் இவ்வாய்வு நடத்தப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வெல்லும் என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 60 இடங்களிலும், மற்ற கட்சிகள் 147 இடங்களில் வெல்லும் எனவும் டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர் கணித்திருந்தது.
**நியூஸ் 18 – ஐ.பி.எஸ்.ஓ.எஸ்**
நாடு முழுவதும் 28 மாநிலங்களில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 199 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள 796 சட்டமன்றத் தொகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 4,776 வாக்குச் சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 25 பேர் என 1,21,542 பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளனர். இந்நிறுவனம் அளித்துள்ள முடிவுகளைப் பார்ப்போம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 336
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 82
மற்றவை – 124
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளையும், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி – பகுஜன் கூட்டணியால் பாஜக கடந்த முறை பெற்ற தொகுதிகளை விட இம்முறை குறைவான தொகுதிகளைத்தான் பெறும். ஒடிசாவிலும், மேற்கு வங்கத்திலும் சற்று கூடுதலான இடங்களைப் பெறும்.
**இந்தியா டிவி – சி வோட்டர்**
பாரதிய ஜனதா கட்சி 43.10 விழுக்காடு வாக்குகளைக் கைப்பற்றி இரண்டாவது முறையாகப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதே இந்தியா டிவி – சி வோட்டர் ஆய்வின் முடிவாகவும் உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 287
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- 128
மற்றவை – 127
இந்தி பேசும் மக்கள் அதிகம் வாழும் ராஜஸ்தானில் 6.27 விழுக்காடு வாக்குகளையும், மத்தியப் பிரதேசத்தில் 2.32 விழுக்காடு வாக்குகளையும், சத்தீஸ்கரில் 6.88 விழுக்காடு வாக்குகளையும் இம்முறை பாஜக குறைவாகப் பெறும் என்றும் இந்த வாக்குக் கணிப்பு ஆய்வு கூறுகிறது. மேற்கு வங்கத்தில் முன்னெப்போதும் பெற்றதை விட இம்முறை கூடுதலான எண்ணிக்கையை பாஜக பெறும் என்பதும், 15.6 விழுக்காடாவது கூடுதல் வாக்குகளைப் பெறும் என்பதும் இந்த ஆய்வின் முடிவாக உள்ளது.
**ரிபப்ளிக் – ஜன் கீ பாத்**
இந்த ஆய்வானது தேர்தல் தொடங்குவதற்கு முன்பே நடத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 2 வரை 5 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக ஜன் கீ பாத் தெரிவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால், வாக்குப் பதிவு முடிந்த பிறகு நேற்று வெளியிட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 41.5 விழுக்காடு வாக்குகளையும், அதில் பாஜக 34.5 விழுக்காடு வாக்குகளையும் பெறும் எனவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 24.5 விழுக்காடு வாக்குகளையும், அதில் காங்கிரஸ் 20.81 விழுக்காடு வாக்குகளையும் கைப்பற்றும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த இரண்டு அணியும் இல்லாத கட்சிகள் 34 விழுக்காடு வாக்குகளைக் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 305 (பாஜக 264)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 124 (72)
மற்றவை – 113
**மற்ற சில ஆய்வுகள்**
**நெயில்சன்**
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 267
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 127
மற்றவை – 148
**நியூஸ் நேசன்**
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 286
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 122
மற்றவை – 134
**மை ஏக்சீஸ்**
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 360
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- 98
மற்றவை – 84
**வாக்குக் கணிப்புகளின் கணிப்பு**
மேற்கூறிய வாக்குக் கணிப்புகளின் சராசரியின்படி பார்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி 307 இடங்களையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 115 இடங்களையும், மற்ற கட்சிகள் 120 இடங்களைப் பெறும். பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களுடன், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமையும் என்பதுதான் நேற்று வெளியான பல்வேறு ஆய்வுகளின் முடிவாக உள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”