நாட்டில் பணப்புழக்கம் வேகமாக சீரடைந்து வருவதால், மார்ச் மாத இறுதிக்குள் இயல்பு நிலை திரும்பும் என்று நோமுரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் (ரூ.500 & ரூ.1000) செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால், புழக்கத்தில் இருந்த 84 சதவிகித அளவிலான உயர் மதிப்புள்ள நோட்டுகள் மக்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டன. இவற்றுக்கு ஈடாக புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட இயலாததால் நாட்டின் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. இதனால், நடப்பு ஜனவரி மாதம் 20ஆம் தேதி நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், பணப்புழக்க விகிதம் 11.8 சதவிகிதத்தில் இருந்து, 6.5 சதவிகிதமாக சரிவடைந்தது. எனவே பணப்புழக்கத்தை சீராக்குவதற்காக ரிசர்வ் வங்கி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை தேவையான அளவுக்கு அச்சடித்து, வங்கிகள் மூலமாக மக்களுக்கு விநியோகித்து வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதே நிலை தொடருமானால், மார்ச் மாதத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று நோமுரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான நோமுரா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’தற்போது புதிய நோட்டுகள் விநியோகம் அதிகரித்து வருவதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பணப்புழக்க விகிதம் 9 சதவிகிதத்தை எட்டும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இது, பொருளாதார நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்த போதுமானதாக இருக்கும். மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து, இந்தியா மிக விரைவாக (மார்ச்) மீளும். எனினும், பொருளாதார மந்தநிலையால், வங்கிகளின் கடன் வளர்ச்சி குறைவாக உள்ளது. பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும் போது, வங்கிகளின் தொழில் துறை சார்ந்த கடன் வளர்ச்சி அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறையவும் வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,