உபா போன்ற ஒடுக்குமுறை சட்டங்களுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என கூறியுள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஐவர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ், கௌதம் நவ்லகா, அருண் பெராரியா மற்றும் வெர்னான் கான்சால்வ்ஸ் ஆகியோரின் கைது மற்றும் அவற்றின் பின்னணி குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (செப்டம்பர் 2) பேசிய அரிபரந்தாமன் “சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது சிவில் சமூகத்திற்கு இழுக்கு. கோடி கோடியாய் கொள்ளையடித்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனரே அதுபோல இவர்கள் செல்லப் போவதில்லை. அப்படி இருந்தாலும் பாஸ்போர்ட்டை எடுக்க செல்லலாமே தவிர கைது என்பது கூடாது. கைதில்லாமல் அவர்களை வீட்டுக்காவலில் வைத்திருந்தாலும் கூட , இதுவே ஒரு வெற்றிதான்.
வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும். நீதித் துறையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஏனெனில் டெல்லி உயர் நீதிமன்றம் உடனடியாக ஒரு நாளுக்கு மேல் வாய்தா கொடுக்க முடியாது என்று கூறி 29ஆம் தேதியே கெளதம் நவ்லகாவை விடுவிக்க உத்தரவிட்டது. அதனுடைய விளைவாகத்தான் இந்த வழக்கு செப்டம்பர் 6ஆம் தேதிக்கு சென்றிருக்கிறது. இந்நிலையில் இங்கிருக்கிற சிவில் சமூகமும், மக்கள் சிவில் உரிமை கழகமும் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் இந்த கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. இதை எதிர்த்து அனைத்து தரப்பு மக்களும் குரல் எழுப்ப வேண்டும். மேலும் தமிழகத்தில் திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன் உள்ளிட்டோரின் கைதுக்கு எங்களுடைய எதிர்ப்பு குரலை நாங்கள் இங்கு பதிவு செய்கிறோம்.” என்றார்.
மேலும், “பல மாநிலங்களில் இருக்கக் கூடிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக் கூறும் போது, சிபிஐ இல்லாமல் மகாராஷ்டிரா காவல் துறை கைது செய்தது ஏன்? என்ற கேள்வியை எதிர் கட்சிகள் கூட கேட்டிருக்கிறது. கைது நடவடிக்கை ஜனநாயகத்தை மீறிய செயல். ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கக்கூடிய தடா, பொடா போன்ற சட்டங்கள் போலத்தான் உபா என்கிற சட்டமும் இருக்கின்றது. இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு இது சரியான நேரம். ஏனெனில் தற்போது திருமுருகன் காந்தி போல் பத்து சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தற்போது விவாதம் ஒன்று வந்திருக்கிறது உபாவை நீக்க வேண்டுமா, வேண்டாமா என்று. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது. நகர நக்சலைட்டுகள் என்று அவர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் தேச விரோதிகள் என்று சொல்கிறார்கள். இரண்டு தரப்பும் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் தான் வித்தியாசம், செயல் ஒன்றுதான். திருமுருகன் காந்தியையும், முருகனையும் தேச விரோதிகள் என்கிறார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை ஒடுக்குவதற்கு எந்தவிதத்தைக் கையாண்டார்களோ அதுபோலவே தற்போதுள்ள அரசும் நடந்து கொள்கிறது. ஆங்கிலேயர்களின் காலம் என்பது எப்படி அவசர நிலை காலமோ அதுபோலவே தற்போதும் அறிவிக்கப்படாத அவசர நிலைக் காலம் இருப்பதாக இந்த கைதுக்கு பின்னர் பலதரப்பினரும் கூறிவருகின்றனர். தற்போது அவசர நிலை காலம் இருப்பதால் அவற்றை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்றவர் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது என்பது அரசியல் நடவடிக்கை என்றார்.
இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை சென்னை பெருநகர மக்கள் சிவில் உரிமை கழகம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,