oமகப்பேறு விடுமுறை: அரசே சம்பளம் வழங்கும்!

Published On:

| By Balaji

மகப்பேறு விடுமுறை அளிக்கும் நிறுவனங்களுக்கு, கர்ப்பிணிகள் வேலைக்கு வராத 7 வாரங்களுக்கான சம்பளத்தை அரசே வழங்கும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, கடந்தாண்டு மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக உயர்த்தியது மத்திய அரசு. முன்பு, 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விடுமுறை நீட்டிப்பை பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க மறுப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இது குறித்துப் பேசினார் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகச் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா. “மாநில அரசுகளிடம் பணியாளர் நலவரி குறைவாக இருப்பதால், மத்தியத் தொழிலாளர் அமைச்சகமே இந்த தொகையை மகப்பேறு விடுமுறை அளிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும். கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்ட 14 வாரங்களில், பாதி காலத்திற்கான தொகையை அரசு ஏற்கும். அதன்படி, ரூ.15,000க்கும் மேலாக ஊதியம் பெறும் பெண் ஊழியர்களுக்கான 7 வார மகப்பேறு விடுமுறைக்கான சம்பளத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும். விடுமுறை முடிந்து அவர்கள் பணிக்குத் திரும்பும்போது, எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அதனைப் பின்பற்ற வேண்டும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share