திருவண்ணாமலையில் பொட்டு, பூ வைத்துச் சென்ற பள்ளி மாணவிகளுக்கு தண்டனை வழங்கிய கிறிஸ்தவப் பள்ளிக்கு எதிராகப் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் க்ளூனி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 5000 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். கிறிஸ்தவ பள்ளி என்பதால், அங்குப் படிக்கும் மாணவிகள் பொட்டு, பூ வைக்க கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேவிகாபுரத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) பொட்டு வைத்தும், தலையில் பூ வைத்தும் பள்ளிக்கு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, பொட்டை அழிக்குமாறும், பூவைத் தலையிலிருந்து எடுக்குமாறும் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். ஆசிரியர் கூறியபடி மாணவிகள் பொட்டை அழித்து, பூவைத் தலையில் இருந்து எடுத்தனர். எனினும், 2 மாணவிகளையும் ஆசிரியர்கள் பிரம்பால் அடித்துள்ளனர். பின்னர், பள்ளி வளாகத்தில் 2 மணி நேரம் மாணவிகளை முட்டிபோட வைத்துள்ளனர். பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவிகள் இதுகுறித்துப் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 5) பள்ளிக்குச் சென்ற பெற்றோர், மாணவிகளை அடித்தது குறித்து விளக்கம் கேட்டனர். கட்டுப்பாடுகளை மீறியதால் தண்டனை வழங்கப்பட்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், கல்விச் சான்றிதழைப் பெற்றுச்செல்லுமாறு கூறி மாணவிகளைப் பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது.
இதனைக் கண்டித்து, 2 மாணவிகளின் பெற்றோர்களும் தங்களது உறவினர்களுடன் இன்று காலை (ஏப்ரல் 6) பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த இந்து முன்னணி அமைப்பினரும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, போளூர்-சேத்துப் பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போளூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகள் யாரையும் துன்புறுத்தவில்லை எனப் பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.�,