பூமராங் படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த், வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
நடிகர் அதர்வா நடித்துள்ள பூமராங் திரைப்படம் இன்று (மார்ச் 8) வெளியாகியுள்ளது. மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ், இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் கண்ணன் இயக்கியதோடு அவரே தயாரித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றபோது, பூமராங் என்ற தலைப்பு கர்மாவை குறிப்பதாகவும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனவும் அதர்வா தெரிவித்திருந்தார். இப்படத்தின் மூலம், விவசாயிகள் சந்திக்கும் இன்னல்களையும், நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்தும் காட்டப்பட்டுள்ளதாக இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் நீர் தட்டுப்பாட்டை சரிசெய்யவும், நீர் தேவையை பூர்த்தி செய்யவும் நதிகளை இணைப்பது மிக அவசியம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பேசிவந்தார். நதிநீர் இணைப்புத் திட்டத்துக்காக ரூ.1 கோடி வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். நதிநீர் இணைப்பு விவகாரம் பற்றி பூமராங் படம் பேசுவதாக தகவல் அறிந்த ரஜினிகாந்த், அப்படக்குழுவை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர், இயக்குநர் கண்னனும், தயாரிப்பு குழுவினரும் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திரையரங்குகளில் பூமராங் படம் வெற்றிகரமாக ஒடுவதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து, படத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.�,