காஷ்மீரில் உள்ள புல்மாவாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு பிப்ரவரி 14ஆம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்யவுள்ளது.
2019 ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 23) சென்னையில் தொடங்கவுள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும்போது தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு புல்வாமா தாக்குதல் காரணமாகத் தொடக்க நிகழ்ச்சியை ரத்து செய்து அதற்காக ஒதுக்கப்படும் தொகையை மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.
நாளை நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை அணி இந்தப் போட்டியில் கிடைக்கும் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ‘‘இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் கர்னலாக உள்ள எங்கள் அணியின் கேப்டன் இதற்கான காசோலையை வழங்குவார்’’ என்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி நான்காவது முறையாகப் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்னாப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி இடம்பிடித்திருந்தார். முக்கியமான போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சால் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
தற்போது இலங்கை அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினார். ஐந்தாவது போட்டியின்போது இவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இவர் விலகியதால் சென்னை அணிக்கு வேகப்பந்து வீச்சில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.�,