oபிரதமர் கையால் ரூ.1 கோடி பரிசு பெற்ற மாணவி!

Published On:

| By Balaji

டிஜிட்டல் முறையில் ரூ.1590 பணப் பரிமாற்றம் செய்து, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் ரூ.1 கோடி பரிசு பெற்றுள்ளார்.

மத்திய அரசு கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் மக்களை டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்தது மட்டுமல்லாமல், மக்களை பல்வேறு பரிசுகளாலும் ஊக்குவித்து வந்தது. இந்நிலையில், டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ‘லக்கி கிரஹக் யோஜனா’, வர்த்தக நிறுவனங்களுக்கு ‘டிஜிதன் வியாபார் யோஜனா’ ஆகிய பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம், லட்டூர் நகரைச் சேர்ந்த ஸ்ரதா மெங்சீத்தே என்பவர், புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். அவர், ரூபே கார்டு மூலம் ரூ.1590 மாதத் தவணை செலுத்தி செல்போன் வாங்கியுள்ளார். இதையடுத்து, மத்திய அரசு அறிவித்த பரிசுத் திட்டத்தின் குலுக்கலில் அவரது பெயர் தேர்வானது. இதையடுத்து, ஸ்ரதா மெங்சீத்தே, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல், 14) பிரதமர் மோடி கையால் ரூ.1 கோடி பரிசு பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம், காம்பாயைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஹர்திக் குமார் என்பவர் இரண்டாவது பரிசான ரூ.50 லட்சம் பெற்றார். இதையடுத்து, உத்தரகாண்ட் மாநிலம், ஷெர்பூரைச் சேர்ந்த பாரத் சிங் என்பவருக்கு மூன்றாவது பரிசான ரூ.25 லட்சம் கிடைத்துள்ளது.

வர்த்தக நிறுவனப் பிரிவில், சென்னை தாம்பரத்தில் உள்ள ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அதிபர் ஆனந்த் என்பவருக்கு முதல் பரிசான ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. இரண்டாவது பரிசான ரூ.25 லட்சம் மகாராஷ்டிர மாநிலம், தானேவைச் சேர்ந்த பியூட்டி பார்லர் ராகினிக்கும், மூன்றாவது பரிசான ரூ.12 லட்சம் தெலங்கானா மாநிலம் அமீர்பேட்டை துணிக்கடை ஷேக் ரபிக்கிற்கும் கிடைத்துள்ளது.

இத்திட்டங்களின் மூலம், ரூ. 258 கோடி பரிசுப் பணத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 லட்ச வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் என பலரும் பெற்றுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share