தமிழகத்தில் மின் வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 27) உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த லோகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகம் முழுவதும் 9 மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட அனைத்து மின் வாரிய அலுவலகத்திலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் வசூல் மையம் காலை 8.30 முதல் 2.30 வரை உள்ளது. ஆனால் பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் உரிய நேரத்துக்கு வருவதில்லை.
காலதாமதமாக வருவதால் நுகர்வோர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அலுவலர்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அலுவலர்கள் உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு வரும் வகையில் அனைத்து அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது தமிழ்நாடு மின் வாரியம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மின்வாரிய தொழிற்சங்கங்களை, பிரதிவாதிகளாகச் சேர்க்கவும் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
�,