பேராசிரியை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்ட மூவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சிபிசிஐடி போலீசார்.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, தற்போது மதுரை மத்தியச் சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில், இவருடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான விசாரணை, இன்று (செப்டம்பர் 4) நீதிபதி இளந்திரையன் முன்பாக நடைபெற்றது. அப்போது சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்குமாறு, முருகனும் கருப்பசாமியும் நிர்மலா தேவியிடம் தொடர்ந்து வலியுறுத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவருக்கும் ஜாமீன் வழங்கினால் புகார் அளித்த கல்லூரி மாணவிகளின் மேற்படிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இவர்கள் மூவரும் தலைமறைவாக வாய்ப்புள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மூவரது ஜாமீன் மனு தொடர்பான விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
�,