oநாடாளுமன்றத்தில் திருச்சி ’துப்பாக்கி’?

Published On:

| By Balaji

நாட்டின் நவரத்தினங்கள் என்று அழைக்கப்படக் கூடிய முக்கியமான ஒன்பது பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி மத்தியில் பாஜக, காங்கிரஸ் என்று எந்த ஆட்சி இருந்தாலும் தீவிரமாகிக் கொண்டேதான் வருகிறது.

பல பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு… ராணுவத்துக்கு துப்பாக்கிகள் உள்ளிட்ட படைக்கலப் பொருட்களை தயாரித்து வழங்கும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையையும் தனியாருக்கு மடை மாற்றம் செய்திட முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதுபற்றி மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையை தனியார் மயமாக்க கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

1966 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை இந்திய ராணுவத்திற்குத் தேவையான தளவாட உற்பத்தியில் முன்னிலையில் உள்ள நிறுவனமாகும். 1600 தொழிலாளர்கள், அதிகாரிகள் பணியாற்றி வரும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில், பீரங்கிகளில் பொருத்தப்படும் துப்பாக்கி, விமானத்தில் பொருத்தப்படும் துப்பாக்கி மற்றும் கார்பன், எஸ்.எல்.ஆர்., 7.6, மற்றும் 5.56 இன்ச், 12.7-13 எம்.எம்.கேனல் இயந்திர ரக ஆயுதங்கள் போன்ற பத்து வகையான துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 41 படைக்கலத் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் நான்கு தொழிற்சாலைகளில் இலகு ரக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையும் ஒன்று.

இந்த நிலையில்தான் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை தனியாருக்கு மாற்றப்படக் கூடாதென கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் ராணுவ வாகனத் தொழிற்சாலையில் அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டு, தனியார் நிறுவனங்களிடம் வாகனங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை முடிவு எடுத்ததால், ஜபல்பூர் ராணுவ வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அதேபோன்று திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையைத் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இதனை நம்பி வாழும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரும் மத்திய அரசு, பாதுகாப்புத் துறை நிறுவனங்களைத் திட்டமிட்டே செயல் இழக்கச் செய்யும் முற்சிகளையும் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

‘நிதி ஆயோக்’ பரிந்துரைகளை ஏற்று, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில்…. இன்று ஜூலை 15 ஆம் தேதி செய்தியாளர்க்ளிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரான அதிமுகவை சேர்ந்த ப.குமார்,

‘’திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை தனியாருக்குக் கொடுக்கப்படும் யோசனையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். துப்பாக்கித் தொழிற்சாலையை காப்பாற்றுவேன்’’ என்று உறுதி கொடுத்துள்ளார்.

திருச்சி எம்.பி. குமார் மட்டுமல்ல… தமிழகத்தின் அனைத்து எம்;பி.க்களும் இதற்காக குரல் கொடுத்தால்தான் மத்திய அரசுக்கு தமிழகத்துடைய எதிர்ப்பின் வலிமையை உணர்த்த முடியும்!�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel