நவீன் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும் அதில் அருண் விஜய்யின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. மாஸ் கலந்த வில்லத்தனமான நடிப்பை அதில் வெளிப்படுத்தியிருந்தார். தற்போது இவர் ‘மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் ஆண்டனி மற்றொரு கதாநாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக இணைந்துள்ளார். ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். இந்தத் தகவலை இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் டைட்டில் போஸ்டரை இன்று (நவம்பர் 1) வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.
அருண் விஜய் தற்போது பிரபாஸ் நடிக்கும் மும்மொழிப்படமான சாஹோ படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்துள்ள தடம் படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார்.
மூடர்கூடம் படத்திற்குப் பிறகு நவீன், ‘கொளஞ்சி’என்ற படத்தைத் தயாரித்திருந்தார். அவர் இயக்கும் அடுத்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகம் உருவாகியிருந்த நிலையில் அவர் இயக்குவதோடு கதாநாயகனாக நடிக்கும் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் போஸ்டர் வெளியானது. ஆனந்தி அதில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் பணிகளும் முழுமையாக நிறைவடைந்த நிலையில் வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. விரைவில் இதன் டீசர் வெளியாக உள்ளது.�,