நகர நக்சலைட்டுகள் என்ற மோசமான வார்த்தையானது பாஜகவின் சதித்தனமான திட்டமாகும். இது அந்த கட்சியிலுள்ள நகர முட்டாள்களால்தான் உருவாக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது என ராஷ்ரிய தலித் அதிகார் மன்ஞ் தலைவரும் எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட்-31) தி பிரிண்ட் இதழில் ஜிக்னேஷ் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது:
என்னுடைய குஜராத் அனுபவத்திலிருந்து பேசுகிறேன். இது குஜராத் மாதிரியை இந்தியா முழுமைக்கும் உருவாக்கும் முயற்சியாகும்..
இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகள், பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்காக திட்டமிட்டுள்ளதாக, போலீசார் அளித்த செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. எந்த மாவோயிஸ்ட் தலைவரும் இது போன்ற கொலை செய்யும் திட்டத்தை இன்னொரு மாவோயிஸ்ட்டுக்கு எழுதி அதையும் லேப்டாப்பில் வைப்பாரா?. இது சிறுபிள்ளைத்தனமில்லையா?
சில ஆண்டுகளுக்கு முன்னதாக மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது இதே போன்ற திட்டம் ஒன்’று வகுக்கப்பட்டது. குஜராத்தின் வளர்ச்சி மாதிரி என்ற விளம்பரத்தை தீவிரமாக அவர்கள் பிரச்சாரம் செய்தனர். அதனால் யாரையும் ஏமாற்ற முடியவில்லை. அப்போது மோடியின் அரசு மோடி உயிருக்கு உடனடியாக ஆபத்து உள்ளது என்று பிரச்சாரம் செய்து சில போலி என்கவுன்ட்டர்கள் மூலம் சிலரைக் கொன்றனர்.
அப்படி கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ராத் ஜஹான் மற்றும் சொகுராபுதீன் ஆகியோரின் வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மப்தி அப்துலின் வழக்கை எடுத்துக் கொள்வோம். அதில் அவர் மீது ஒரு இந்து கோயிலைத்தாக்கியதாக வழக்கு போடப்பட்டது. அவர் அதற்காக 11 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்தார். அதன் பிறகு அவர் நிராபராதி என 2014இல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் ஆனால் குஜராத்தின் கீழமை நீதிமன்றம் அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி தண்டனை வழங்கியது. இது போன்ற சதித்திட்டத்திற்கான விதைகள் குஜராத்தில் விதைக்கப்பட்டன. எல்கார் பரிஷத்தானது கோல்சே பட்டில் மற்றும் பிபி.சவாந்த் ஆகிய இரண்டு மதிப்புக்குரிய ஓய்வு பெற்ற நீதிபதிகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.
அதில் ராதிகா வெமுலாவும் (ரோஹித் வெமுலாவின் தாயார்) மற்றும் பிரகாஷ் அம்பேத்கரும் கலந்து கொண்டனர். நாங்கள் தலித் மக்கள், குஜராத்தின் மக்கள் தொகையில் 7 விழுக்காடு உள்ளோம். ஆனால் தேசிய அளவில் 17 விழுக்காடு உள்ளோம். ராஜஸ்தான்,மகாராஷ்டிரா,மத்தியப் பிரதேஷ் உத்தரப் பிரதேஷ் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் தலித் மக்கள் ஆளும் பாஜகவிற்கு எதிர்ப்பை தெரிவித்து, எழுச்சி பெற்று வருகின்றனர்.
இதனால் பாஜக பீதியடைந்து வருகிறது. ஏனெனில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது, வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன,பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பணமதிப்பழிப்பின் தோல்வி மற்றும் அரசுக்கெதிராக அதிகரித்து வரும் அதிருப்தி ஆகியவற்றுக்கு மோடி அரசிடம் பதில் இல்லை. இதன் விளைவாகத்தான் தலித் தலைவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் நகர நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தத் தொடங்கியுள்ளனர். தலித்கள் எழுச்சியிலிருந்தும் உண்மையான பிரச்சினைகளிலிருந்தும் திசை திருப்பவே நகர நக்சலைட்டுகள் என்ற முத்திரை குத்தப்பட்டு வருகிறது.
எல்கார் பரிஷத்தில் நான் உரையாற்றினேன். அப்போது நான் எம்எல்ஏ ஆகி விட்டதனால் தலித்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அனைத்து ஒடுக்கப்பட்டவர்களும் தங்களது உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்று குறிப்பிட்டேன். ஆனால் பரிஷத் நடந்து சில நாட்களுக்கு பின்னர், பீமா கோரேகானில் சாம்பாஜி பிடே மற்றும் மிலிண்ட் ஏக்போதே(இந்துத்துவ சக்திகள்) ஆகிய இருவரால் கலவரம் துாண்டி விடப்பட்டது. என்னுடைய பேச்சு சில ஊடகங்களால் சிதைத்து வெளியிடப்பட்டது. நான் தெருச்சண்டைகளையும் வன்முறையையும் துாண்டி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளேன்.
நான் ஆற்றிய உரைகளில் முற்போக்கான உரையாக அமைந்த ஒன்றுக்காக தற்போது என் மீது கும்பல் வன்முறையை துாண்டி விட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அதிகாரத்திலுள்ளவர்களால் மக்கள் எப்படி முட்டாளாக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. நான் பார்ப்பன தனி நபர்களுக்கு எதிரானவன் அல்ல. நான் பார்ப்பனியத்திற்குத்தான் எதிரானவன். இருப்பினும் என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுவோருக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நாங்கள் எந்த சாதியையும் குறி வைக்கவில்லை ஆனால் சாதி அமைப்பையே ஒழிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் கைதுகள் ஒன்றை தெளிவாகக் காட்டுகின்றன. இனி அவர்கள் யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை. ஏற்கனவே தலித்கள், முஸ்லீம்கள், ஆதிவாசிகள் ஏராளமான எண்ணிக்கையில் இந்திய சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் வழக்கறிஞரும்(சுதா பரத்வாஜ்) குறி வைக்கப்பட்டிருக்கிறார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமானது அநீதியை அனுமதிப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. அந்த சட்டம் அம்பேத்கரியவாதிகளையும், ஆதிவாசிகளையும் நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி அவர்கள் மீது வழக்கு தொடருவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழில் – சேது ராமலிங்கம்
�,”