பந்துவீச்சு மோசமடைந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து பேசிய விராட் கோலி, “விக்கெட்டுகள் சரியாகவே விழுந்தன. ஆனால் பனிப்பொழிவைப் பொறுத்த வரையில் இரண்டாவது முறையாக நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோம். பனிப்பொழிவுக்கு நடுவே பந்துவீசுவது மிகக் கடினமானது. பனிப்பொழிவால் எங்களது பந்துவீச்சு மோசமடைந்தது. நமது பந்துவீச்சாளர்கள் திறம்பட விளையாட முயற்சித்தனர். எனினும் ஆஷ்டான் டர்னர் நமது பந்துவீச்சை முறியடித்துவிட்டார். ஹண்ட்ஸ்கோம்ப், காவஜா ஆகியோரும் நேர்த்தியாக பேட்டிங் செய்தனர். டர்னரின் பேட்டிங் ஆட்டத்தையே மாற்றியமைத்துவிட்டது. கடந்த போட்டியின்போது பனிப்பழிவு விவகாரத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டதாக தெரிவித்தோம். இந்தப் போட்டியும் அதேபோல அமைந்துவிட்டது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான் என்பதை நாங்கள் ஏற்கிறோம். கடந்த போட்டியின்போது கேதர் ஜாதவ்வும், விஜய் சங்கரும் பந்துவீச சிரமப்பட்டனர். அதனால் இந்தப் போட்டியில் சஹாலை களத்தில் இறக்கினோம். இந்த முறையும் பனிப்பொழிவு சிரமத்தை ஏற்படுத்திவிட்டது. முக்கிய ஸ்டம்பிங் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். ஃபீல்டிங்கிலும் தோல்வியடைந்துவிட்டோம். கொண்டாடுவதற்கு எங்களிடம் எதுவுமில்லை. இன்னும் கடினமாக உழைத்து தீவிரமாகவும், உற்சாகத்துடனும் அடுத்த போட்டியை வென்று தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.�,