�காந்தி ஜெயந்தி தினத்தன்று 2018ஆம் ஆண்டுக்கான தேசிய காதி திருவிழா மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் காதி பொருட்களைப் பிரபலப்படுத்தும் விதமாகவும், காதி உற்பத்தியை மேம்படுத்தும் விதமாகவும் காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தால் காதி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காதி திருவிழா அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரான கிரிராஜ் சிங் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காதி உற்பத்தியாளர்கள் இத்திருவிழாவில் பங்கேற்றுத் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவார்கள். இதனால் இத்துறையைச் சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
காதி ஆடைகள், காதி பட்டுப் புடவைகள், ஆடைகள் தயாரிப்புக்கான உபகரணங்கள், போர்வைகள், தரை விரிப்பான்கள், ரசாயனக் கலப்பில்லா ஷாம்பூக்கள், தேன் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் இத்திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் கிரிராஜ் சிங் பேசுகையில், “நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் காதி பொருட்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளது. முதற்கட்டமாக 55 நாடுகளில் இந்தியாவின் காதி பொருட்கள் பிரபலப்படுத்தப்பட்டன. மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி இத்துறையில் செயல்பட்டால் வேலையில்லாத் திண்டாட்டமே இந்தியாவில் இருக்காது” என்று கூறினார்.�,