மகனைக் கொலை செய்தவரைப் பழிவாங்குவதற்காகக் கள்ளத் துப்பாக்கி வாங்க முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் – மஞ்சுளா தம்பதியரின் மகன் ரித்தீஷ் சாய். அப்பகுதியிலுள்ள பள்ளியொன்றில், இவர் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். அரசு அலுவலகமொன்றில் பணியாற்றி வந்த மஞ்சுளா, அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் பழகிவந்தார். ஒருகட்டத்தில் இவர்களது நட்பு எல்லை கடந்தது. இதுபற்றி, தனது தந்தையிடம் புகார் கூறினார் ரித்தீஷ். இதனையடுத்து, காவல்நிலையத்தில் நாகராஜ் மீது புகார் அளித்தார் கார்த்திகேயன். இதனால் நாகராஜன் கோபமடைந்தார்.
கடந்த மார்ச் மாதம் பள்ளியிலிருந்து திரும்பிய ரித்தீஷைக் கடத்திச் சென்றார் நாகராஜ். தாம்பரம் சேலையூரிலுள்ள தனது வீட்டில் சிறுவனை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்தார் நாகராஜ். இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நாகராஜை கைது செய்தது காவல் துறை. அவர் தற்போது சிறையில் இருந்து வருகிறார்.
மகன் ரித்தீஷ் மரணத்தினால், நாகராஜ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார் மஞ்சுளா. சில நாட்களுக்கு முன்பு, ரித்தீஷ் கொலை வழக்கில் நாகராஜ் ஜாமீன் பெறவுள்ளதாகத் தகவல் வெளியானது. சிறையில் இருந்து வெளிவரும் நாகராஜைக் கொல்லும் நோக்கத்துடன், 5 லட்ச ரூபாய் கொடுத்து துப்பாக்கி வாங்க முயற்சித்துள்ளார் மஞ்சுளா. இதற்காக இரண்டு நபர்களைச் சந்தித்துள்ளார். ஆனால், அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த நபர்கள் பொம்மை துப்பாக்கியைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மஞ்சுளா காவல் நிலையத்தில் இருவர் மீதும் புகார் அளித்தார். இதன் மூலமாக, இந்த தகவல்கள் வெளியில் தெரிய வந்தது. இதுபற்றி விசாரணை செய்த போலீசார் பிரசாந்த், சுரேஷ் என்ற இரண்டு நபர்களைக் கைது செய்தனர். அதோடு, ஒரு நபரைக் கொல்லும் நோக்கத்துடன் கள்ளத் துப்பாக்கி வாங்க முயன்ற காரணத்திற்காக மஞ்சுளாவையும் கைது செய்தனர்.
�,