இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது சரியல்ல. மேலும், மாட்டிறைச்சி பிரச்சினையில் மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்ற முழக்கங்களுடன் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு விழிப்புணர்வு பிரசார பயணம் தொடங்கியது. இதனை நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் இன்று நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. மத்திய பாஜக ஆட்சி இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. ஜனாதிபதி தேர்தலில் அதிமுக-வின் 3 அணிகளும் போட்டிபோட்டு கொண்டு பாஜகவை ஆதரிக்கிறது. இதற்கு மத்திய அரசின் மிரட்டல் தான் காரணம். தற்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. மத்திய அரசு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது தான் இதற்கு முக்கிய காரணம்.
தமிழக, இலங்கை மீனவர் பிரச்சினையிலும் மத்திய அரசு நிரந்தர தீர்வு காணவில்லை. இதனால் இந்திய மீனவர்கள் 600 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே காவிரி பிரச்சினையில் மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு உடனே நிரந்தர தீர்வு காணவேண்டும். யார் எந்த உணவு சாப்பிடவேண்டும் என்பது அவரவர் உரிமை. இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது சரியல்ல. மாட்டிறைச்சி பிரச்சினையில் மதத்தின் பெயரால் மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பைக் கண்டித்து ஜூன் 30-ஆம் தேதி(நாளை) நடைபெறும் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது ஆதரவைத் தெரிவித்து கொள்கிறது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சிக்கு மாநில அரசு ரூ.33 ஆயிரம் கோடி கேட்டது. மத்திய குழு ரூ.2500 கோடி வழங்கப் பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு ரூ.1750 கோடி மட்டும் ஒதுக்கி உள்ளது. இது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல. தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு தவறி விட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,