ஏப்ரல் – ஜூலை மாதங்களில் இந்தியாவின் தங்க நகைகள் ஏற்றுமதி 220 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் தங்கக் கட்டிகளின் அளவும் 450 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் ஏப்ரல் – ஜூலை மாதங்களுக்கான தங்கம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலங்கள் (EPZ) வாயிலாக மேற்கூறிய காலகட்டத்தில் மொத்தம் ரூ.23,012.51 கோடி மதிப்பிலான தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் – ஜூலை மாதங்களில் ஏற்றுமதியான ரூ.7,175.54 கோடி மதிப்பிலான தங்க நகைகளை விட 220.7 சதவிகிதம் அதிகமாகும். அதேநேரம் உள்நாட்டு சரக்குப் பகுதி (DTA) வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு 7.36 சதவிகிதம் குறைந்து ரூ.5,863.67 ஆக மட்டுமே உள்ளது.
தங்கக் கட்டிகளின் இறக்குமதியைப் பொறுத்தவரையில், ஜூலை மாதத்தில் மட்டும் 450 சதவிகித உயர்வுடன் மொத்தம் ரூ.5,246.54 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. சென்ற ஆண்டின் ஜூலை மாதத்தில் இதன் மதிப்பு ரூ.954.07 கோடியாக மட்டுமே இருந்தது. அதேபோல, ஏப்ரல் – ஜூலை மாதங்களில் ரூ.21,169.04 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட ரூ.5,266.80 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை விட இது 302 சதவிகிதம் அதிகமாகும்.
தங்க நகை ஏற்றுமதியாளர்களில் ஒருவர் *ஃபினான்சியல் கிரானிக்கல்* ஊடகத்திடம் பேசுகையில், ” இந்தியாவிலிருந்து அதிகமான தங்க நகைகளை இறக்குமதி செய்யும் சந்தையாக துபாய் உள்ளது. இருப்பினும் அங்கு தங்கம் இறக்குமதிக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்ட பிறகு அந்நாட்டின் இறக்குமதி சற்று குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.�,