டெல்லி காவல் ஆணையராக இருக்கும் அமுல்யா பட்நாயக்கின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் புதிய காவல் ஆணையரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
டெல்லி வன்முறையின் போது காவல்துறை சரியாகச் செயல்பட்டிருந்தால் இதுபோன்ற ஒரு பாதிப்பை தவிர்த்திருக்கலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்படப் பல தரப்பினரும் தெரிவித்திருந்தனர். அதுபோன்று டெல்லி காவல்துறை மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் சிஆர்பிஎப் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக இருந்த ஸ்ரீவஸ்தவாவை டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு போலீஸ் ஆணையராக நியமித்து நிலைமையைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 25ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அவர் டெல்லியில் இயல்புநிலையை மீட்க முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரை டெல்லி காவல் ஆணையராக நியமித்து உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதுள்ள ஆணையர் அமுல்யா பட்நாயக்கின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் ஸ்ரீவஸ்தவா புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மார்ச் 1ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார். 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்த ஸ்ரீவஸ்தவா கோவா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் யூனியன் பிரதேச ஐபிஎஸ் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
**கவிபிரியா**�,