சேலத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு (ஆகஸ்ட் 31) சேலத்திலிருந்து பெங்களூருக்கு மலர்கள் ஏற்றிக்கொண்டு சென்ற வேன் ஒன்று சாலையோரம் பழுதாகி நின்றிருந்தது. அப்போது, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற அரவிந்த் என்ற தனியார் பேருந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த வேன் மீது பலமாக மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையின் நடுப்பக்கம் உள்ள தடுப்பு சுவரை தாண்டிச் சென்று, எதிரே பெங்களூரில் இருந்து கேரளா செல்வதற்காக வந்து கொண்டிருந்த யாத்ரா என்ற தனியார் சொகுசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
நள்ளிரவு ஒரு மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில், இரண்டு பெண்கள், ஐந்து ஆண்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 37 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் கேரளா மாநிலம் கரிகுளம்பள்ளியை சேர்ந்த ஜேக்கப்(59) மற்றும் கோட்டயத்தைச் சேர்ந்த சானு (29), சிஷி வின்சென்ட் (36), அவரது மனைவி டீனு ஜோசப் (32), சிஷி வின்சென்ட்டி தந்தை ஜான் ஜோசப் (6௦) சிஷி வின்சென்ட்டின் தாயார் அல்போன்ஸா (55) ஆகியோரின் சடலம் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்னொருவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை. இறந்து போன ஏழு பேரில் சிஷி வின்சென்ட்டின் குடும்பத்தில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் பயணம் செய்த அவரது குடும்பத்தில் மூன்று வயது ஆண் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அந்த குழந்தை பெற்றோரை தேடி அழுது கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, மாநகரக் காவல் ஆணையர் சங்கர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
கிரேன் உதவியுடன், சாலையில் கவிழ்ந்த பேருந்துகள் இரண்டும் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், தனியார் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவினாலே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. போலீசார் தங்களது விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
�,”