குஜராத் மாநில சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையைப் பாதுகாக்கும் வகையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபேப்ரிக் ஆடைகளுக்குக் கடுமையான வரி விதிக்க வேண்டும் என்று அம்மாநில ஜவுளித்துறையினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சார்பாக தெற்கு குஜராத் வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது. அதன் தலைவர் பி.எம்.ஷா மேலும் கூறுகையில், “கடந்த ஓராண்டில் மட்டும் சீனாவில் இருந்து ரூ.10,000 கோடிக்கும் மேல் ஃபேப்ரிக் ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் ரூ.5,500 கோடிக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இங்கு வரும் ஆடைகளுக்காக அந்நாட்டு ஜவுளித்துறைக்கு சீனா அதிக மானியம் வழங்குகிறது. இதனால் அங்கு ஜவுளி உற்பத்திச் செலவுகளும் குறைந்துள்ளது. அதே நேரம் இந்திய நெசவாளர்களின் நிலை இங்கு கேள்விக்குறியாகியுள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபேப்ரிக் ஆடையின் விலை ஒரு சதுரமீட்டர் ரூ.5 முதல் ரூ.15 வரையில் உள்ளது. இது மிக மிகக் குறைவாகும். ஏனெனில் ஒரு கைக்குட்டை கூட 5 ரூபாய்க்குக் குறைவாகக் கிடைக்காது. எனவே ஒரு மீட்டர் அளவிலான ஃபேப்ரிக் ஆடை குறைந்தது 50 ரூபாயாக இருக்க வேண்டும். மேலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் அளவைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறினார்.�,