கபிஷ் பாலகிருஷ்ணன்
அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான ‘விதை’ தமிழக இளைஞர்கள் மூலம் விதைக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் அதே நேரத்தில் அரசியலில் மாற்றமும் விரும்பும் இளைஞர்கள் வாயிலாகத் தமிழ்ச் சமூகம் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் அடியெடுத்து வைப்பதை அனைவருமே உணர முடிகிறது. கருத்துக்களோடு நில்லாமல் களத்தில் இறங்கிச் செயல்படும் இளைஞர்கள் கூட்டம் இங்கே ஏராளம். தமிழகத்தின் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானதே. இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழத்தில் போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான மாணவர்கள் எழுச்சி, ஏழு பேர் மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம் என அனைத்திலும் இளைஞர்களின் முத்திரையைப் பார்க்கலாம். எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்காமல், மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாகக் கிளர்ந்து எழுந்து போராடி வருகிறார்கள்.
மாணவர்களும், இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது, அரசைக் கண்காணிப்பது, தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது, தேவைப்படும்போது கிளர்ந்தெழுவது ஆகியவை ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு அழகு. இந்தப் பின்னணியில்தான் கபிலன் வைரமுத்து தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற ஆவணப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய அரசியல் சூழலில் இளைஞர்கள் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும், அரசியல் தளத்தில் பிரவேசிக்க நினைக்கும் மாணவர்களையும், இளைஞர்களையும் செயல்படவிடாமல் தடுக்கும் காரணிகள் என்ன, அவர்களுடைய அரசியல் முன்னெடுப்புகள் எப்படி தடுத்து நிறுத்தப்பட்டது என்பதையெல்லாம் விளக்கும் ஆவணப்படம் இது.
**வெற்றி மட்டும் முக்கியமல்ல**
இங்கு வெற்றி மட்டுமல்ல, முயற்சியும் படமாக்கப்படலாம் என்று கூறும் இந்த ஆவணப்படத்தில் 2000ஆவது ஆண்டு லயோலா கல்லூரியில் இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகத்தைத் தனது நண்பர்களுடன் அரங்கேற்றிய கபிலன், 2009ஆம் ஆண்டில் தொடங்குவதாக இருந்த ‘மக்கள் அணுக்கப் பேரவை’ என்ற அரசியல் சார்ந்த அமைப்பு அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது வரை பல அனுபவங்களை 36 நிமிட ஆவணமாகப் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆவணப்படத்தில் கபிலன் வைரமுத்து உட்பட அவருடைய நண்பர்களான ராஜபாண்டி, இம்தியாஸ், நித்தியா, நவீன், ஜெகன், விஜய், பிரசாந்த் உள்ளிட்டவர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். ஆர். கார்த்திகேயன் இதை இயக்கியுள்ளார்.
தங்களுடைய முதல் அரசியல் முன்னெடுப்பு குறித்து கபிலன் வைரமுத்து, “சமூக வலைதளங்களின் உதவியால் இங்கு அனைவரும் ஒரு ஊடகமாக மாறிவிட்ட நிலையில், 2002ஆம் ஆண்டு இணையம் பெரிதும் அறியப்படாத நேரத்தில் ‘சுய சமுதாயப் படை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதைப் பொது வெளியில் பிரபலப்படுத்த குடியரசு தின வாழ்த்துகளோடு சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப் போனபோது, ஒரு காவல் துறை அதிகாரி எங்களைத் தடுத்து நிறுத்தி, எங்களுடைய செயல்பாடு குறித்து விசாரித்தார். மேலும், எங்களுடைய அமைப்பின் பெயரை பார்த்துவிட்டு இப்படியெல்லாம் ஒரு அமைப்புக்கு பெயர் வைக்கக் கூடாது. முதலில் உங்களுடைய அமைப்பின் பெயரை மாற்றி அதை முறையாகப் பதிவு செய்யுங்கள் என்று கூறினார். இதனையடுத்து ‘இளைஞர் சமுதாய முன்னேற்றச் சங்கம்’ என்ற ஒரு அமைப்பை முறையாகப் பதிவுசெய்தோம். அதுவே அரசியலில் எங்களுடைய முதல் அடி” என்கிறார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைப்பு குறித்து பேசிய நவீன், “அரசுத் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளைப் போன்று எங்கள் அமைப்பிலும், கல்வி, சமுதாயம், இயற்கை, சுற்றுச்சூழல் என்று பல குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டோம். பள்ளித் தோழர்களாக இருந்த நாங்கள் அனைவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கச் சென்றோம். அங்கு எங்களோடு படித்த நண்பர்களிடம் இளைஞர் சமுதாய முன்னேற்றச் சங்கம் பற்றி விளக்கி அவர்களையும் எங்களோடு இணைத்துக்கொண்டு செயல்படத் தொடங்கினோம். அதுவே நாங்கள் பணியாற்றிய இடங்களிலும் தொடர்ந்தது. இப்படி எங்களுடைய பலம் சற்று அதிகரித்திருந்தது” என்று கூறுகிறார்.
தாங்கள் முன்னெடுத்த திட்டங்கள் குறித்து விளக்கிய நித்தியா, “புறநகர் பகுதிகளில் வாழும் ஆதரவற்றோர் பசியைப் போக்க பிடி அரிசி திட்டம், கோவை குண்டுவெடிப்புக்கு எதிரான போராட்டம், குடிக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம், அனைவரும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ‘சட்டத்திரட்டு-2006’ என்ற இலவச சட்டப் புத்தகம், அரசுப் பள்ளி மறுசீரமைப்பு குறித்த கள ஆய்வு, மத்திய மற்றும் வடசென்னையில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நட்டது, கும்பகோணம் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல்சார் ஆறுதல், இலங்கைத் தமிழர்கள் குரல் என்ன, குறை என்ன என்பது குறித்த கள ஆய்வு போன்ற பல விஷயங்களை நாங்கள் முன்னெடுத்தோம்” என்றார்.
**அரசியல் களத்தில் இளைஞர்களின் பயணம்**
“சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இளைஞர்களை ஒன்று திரட்டிக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. அரசியல் விழிப்புணர்வு குறித்த பல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அரசியல் பற்றிய எங்களுடைய அறிவை விசாலப்படுத்திக்கொள்ள எழுத்தாளர் சுஜாதா, மக்கள் சக்தி இயக்கம் எம்.எஸ்.உதயமூர்த்தி, வா.செ. குழந்தைசாமி, க.ப.அரவாணன் மற்றும் பல அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். மேலும் நிகழ்கால அரசியலை புரிந்துகொள்ள தமிழக அரசியல் ஆராய்ச்சிக் குழு என்ற ஒரு குழுவை அமைத்து அரசியல் பார்வை என்ன என்பதை அறிந்துகொண்டோம். ஆனால் சில சூழ்நிலை காரணங்களால் நாங்கள் அப்போது வெவ்வேறு தளங்களில் பயணிக்க வேண்டிய நிலை உருவானது” என்று கபிலன் தெரிவித்தார்.
அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் எங்களுடைய இரண்டாவது ஒருங்கிணைப்பு சாத்தியமானது மீண்டும் அனைவரும் ஒன்று கூடினோம். ஆனால் இப்போது எங்களுக்கு முதல் தடையாக இருந்தது எங்களுடைய குடும்பம்தான் என்று இம்தியாஸ் கூற, அதைத் தொடர்கிறார் கபிலன்,”கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலைஞர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தோடு நட்புறவில் இருப்பது எங்கள் குடும்பம், அதேபோன்று என் நண்பர்களின் குடும்பமும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைப் பின்பற்றும் நிலையில் அவர்களை எதிர்த்து வேறு ஒரு அரசியலைப் பேச வேண்டிய கட்டாயம். குடும்பத்திலிருந்து எதிர்ப்பு அதிகமானது. எவரும் எங்கள் கருத்துக்களை ஏற்கவில்லை. 2007ஆம் ஆண்டில் சமூக வலைதளங்களின் வருகையைப் பயன்படுத்தி எங்களுடைய இயக்கத்தைப் பொது வெளியில் தெரியப்படுத்தினோம். என்னுடைய ‘பூமராங் பூமி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியன்று எங்களுடைய ‘மக்கள் அணுக்கப் பேரவை’ என்ற அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிடலாம் என்று முடிவு செய்தோம்” என்றார்.
2009ஆம் ஆண்டு ‘பூமராங் பூமி’ புத்தக வெளியீடு குறித்த விளம்பரச் சுவரொட்டிகள் வீதி எங்கும் எங்களுடைய அரசியல் வருகையை பறைசாற்றிக்கொண்டிருந்தன. ஆனால் விழாவுக்கு இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு காவல் துறை அதிகாரி என்னை அழைத்து, உங்களுடைய நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உங்களுடைய அரசியல் முன்னெடுப்பைக் கைவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்போது அது எனக்கு புரியவில்லை. அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது ஒரு காவலர் என்னிடம், உங்கள் நண்பர்கள் எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும் அல்லவா என்று கூறிவிட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து என் நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர்களுக்குச் சிலரிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. பதிவிட முடியாத சில சம்பவங்கள் அரங்கேறின. இதனையடுத்து எங்களுடைய பயணத்தை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இங்கு யானைகள் வீழ்த்தப்படுவதை விட எறும்புகள் நசுக்கப்படுகின்றன. இளைஞர்களின் ஆக்கபூர்வமான முயற்சிகளைத் தடுத்தால் இந்த நாடு உருப்படாது என்று தன் உள்ளக்குமுறலை கொட்டித் தீர்த்தார் கபிலன் வைரமுத்து.
**எங்கே தவறு நிகழ்ந்தது?**
இப்போது நடந்த ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களைப் பார்த்த பின்னர் நாங்கள் என்ன செய்யத் தவறினோம் என்று எங்களுக்குப் புரிகிறது என்று கூறிய நித்தியா, “ஒரு அரசியல் கனவோடு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அரசியல் கொள்கைகளை முன்வைத்த நாங்கள் தியாகம் செய்யத் தவறிவிட்டோம். தியாகம் இல்லாமல் மாற்றம் இல்லை. இங்கு நடக்கும் அரசியல் அயோக்கியத்தனத்துக்கு இளைஞர்களின் எழுச்சி ஒரு தொடக்கம். அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள்” என்று கூறினார்.
தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து பேசிய கபிலன் வைரமுத்து,”நாம் அனைவரும் உலக அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் பற்றிய கண்ணோட்டம் மாற வேண்டும். இப்போதைய சூழலில் பத்து பேர் ஒன்றாக கூடி அரசியல் பேசினால் சமூக விரோதிகளாக முத்திரை குத்தப்படுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். யாரும் அரசியலை ஒரு தளமாகப் பார்ப்பதில்லை. இங்கு அரசியல் ஆர்வமுள்ள, அரசியல் தளத்தில் இயங்க முன்வரும் இளைஞர்களுக்காக, B’ஸ்கூல் போன்று P’ஸ்கூல்(பொலிடிகல் ஸ்கூல்) உருவாக்க வேண்டும். தற்போது, அது குறித்து யோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்த ஆவணப்படத்தில் நாங்கள் பகிர்ந்துகொண்ட சிறு அனுபவம் எங்கள் சகோதர சகோதரிகளுக்குப் பயன்தருமென நம்புகிறோம்.16 வயதில் தொடங்கிய இந்த முயற்சிகளில் சில அபத்தங்கள் இருக்கலாம்; அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருக்கலாம். ஆனால் சமூக மாற்றத்திற்காக நிகழ்ந்த நேர்மையான முயற்சிகளில் இதுவும் ஒன்று. நாங்கள் இதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் எங்களை விடப் பன்மடங்கு சிறப்பாக இயங்கிய இயங்கும் இளைஞர் இயக்கங்கள் அவர்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முன் வருவர். இது ஆரோக்கியமான செயல்களுக்கு வழிவகுக்கும்” என்று சொன்ன கபிலன், “திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் மீது விழும் அரசியல் வெளிச்சம் தரையில் நிற்கும் இளைஞர்களின் மீதும் விழட்டும்” என்று முத்தாய்ப்பாகக் கூறினார்.
�,”