நெஞ்சில் இனிக்கும் தமிழ்
**ஆத்மார்த்தி**
இசை உங்கள் குழப்பங்களைக் கரைத்து, உங்கள் குணத்தையும் உணர்ச்சிகளையும் தூய்மைப்படுத்த உதவும். மேலும், ஆதுரத்தின் காலங்களிலும் துக்கத்தின் பொழுதுகளிலும் மகிழ்ச்சியின் நீரூற்று உங்களுக்குள் மகிழ்ச்சியின் நீரூற்றை உயிர்த்திருக்கச் செய்யும்
– டீட்ரிச் போன்ஹோஃபர்
இசையின் லாவகம் புரிந்துகொள்ளக் கடினமானது. வருடக்கணக்கில் இசை கற்ற பலரும் திரை இசையில் புகுந்து சோபித்ததில்லை. தன் அகத்திலிருந்து இசைத்த சிலருக்கு ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறது காலம். வெற்றி எனும் மாலையைக் கால யானை யார் கழுத்தில் சூட்டும் என்பதற்கு எந்தச் சூத்திரமும் இல்லை. மேதைகள் பலரும் ஒளிபடாப் பெருவாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். திரை இசை என்பது அரூபத்தோடு உரையாடுவது போன்றது. மொழிதலைத் தாண்டிய பேரறிவு ஒன்று அங்கே நியதியாகிறது. எல்லோரும் வென்றுவிடுவதில்லை
தாயன்பன், அந்தக் காலத்து நடிகர் பி.எஸ்.வெங்கடாசலம் – லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாக தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் என்னுமிடத்தில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பிறந்தார். சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலும் பிறகு லயோலா கல்லூரியிலும் கல்வி கற்ற தாயன்பன், கல்லூரிப் படிப்பை முழுவதுமாக முடிக்கவில்லை. தமிழிசைக் கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர், கவிஞர், பேச்சாளர், திரைக்கதை ஆசிரியர், கொடையாளர். சமூக நற்பணியாளர், தமிழிசை வல்லுநர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர்.
இசை வாரிதி டி.எஸ்.சம்பந்தமூர்த்தியிடம் தன் ஐந்தாவது வயதிலிருந்து இசை கற்ற தாயன்பன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்புகழ் மண்டபத்தில் 10 வயதில் அரங்கேற்றம் செய்தவர். அம்பாசமுத்திரம், திருவொற்றியூர், காஞ்சிபுரம், கந்தகோட்டம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள கோயில்களில் இவர் பாடல்களைப் பாடி இருக்கிறார்; தமிழ் இசைப் பாடல்களைப் பாடி இருக்கிறார்
15 வயதில் நவீன இசைமீது ஆர்வம் திரும்பியதால் நாடகத்துக்கான இசை, இசையின் நவீன வடிவங்கள், திரைப்படங்களுக்கான இசை மேடை, மெல்லிசை ஆகியவற்றில் தணியாத ஆர்வம் கொண்டார். மேற்கத்திய செவ்வியல் இலக்கணங்களை இசை குறித்த புத்தகங்களிலிருந்து தானே கற்ற இவர், ஜேம்ஸ் ஜார்ஜ் ஹாரிஸன் ஆகியோரிடமிருந்து பியானோ வாசிக்க கற்றுக்கொண்டார். பெர்குசன் பாங்கோஸ், டோலக் காங்கோ டிரம்ஸ் ஆகியவற்றை நன்கு கற்றுத் தேர்ந்து 21ஆவது வயதில் முழுமையாக யாருடைய உதவியும் இன்றி இசை அமைப்பதற்குத் தயாரானார்.
வெகு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்த தாயன்பன் இசையின் நுட்பங்களில் அலாதி ஞானம் கொண்டவர். ஒரு பாடலின் உட்கட்டுமானத்தை இத்தனை நேர்த்தியாக அமைக்கத் தெரிந்த இசை அமைப்பாளர்கள் வெகு குறைவே. உன்னிடத்தில் நான் என்ற படத்தில் வாலி எழுதி யேசுதாஸ் பாடிய நினைத்தால் உனைத்தான் நினைப்பேன் என்ற பாடல் இவரது பெருமையின் ஒளியை உயர்விளக்காக ஏற்றிக்காட்ட வல்லது. நின்றொலிக்கும் ஆரம்ப இசை கர்னாடக சங்கீத ஸ்வரக்கூட்டுடனான தொடர்பிசை நின்று நின்று ஒலிக்கக் கூடிய யாராலும் கற்பனை செய்துவிட முடியாத இருள் பொங்குகிற இடையிசை வேகம், குரல் என எல்லாமே இன்பம் சுழலிசைப் பாடல் வகைகளில் இதுவும் அடங்குவது வியத்தலுக்குரிய பேரின்பம்.
நினைத்தால்… உனைத்தான்… நினைப்பேன்…
நெஞ்சில்… தமிழாய்… இனிப்பேன்…
நினைத்தால்… உனைத்தான்… நினைப்பேன்…
நெஞ்சில்… தமிழாய்… இனிப்பேன்…
நிழல்போல்… தொடர்வேன்…
நினைவாய்… படர்வேன்…
அடடா… அடடா…
இளமை.. இளமை.. இளமை…
நினைத்தால்… உனைத்தான்… நினைப்பேன்…
நெஞ்சில்… தமிழாய்… இனிப்பேன்…
வா… தினம் தினம் தா… தரிசனம் தான்…
நிலவே… நான் தான் வானம்…
உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே
ஒரு பாதையில்…
பிரிவென்ற வார்த்தை இல்லையே அகராதியில்…
பனிக்கால போர்வையாக நீ தை மாசியில்…
இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்…
இரவும்… பகலும்…
தொடரும் உறவு இதுவோ….
நினைத்தால்… உனைத்தான்… நினைப்பேன்…
நெஞ்சில்… தமிழாய்… இனிப்பேன்…
நான்… தழுவிட நீ… நழுவிட ஏன்… அழகே… இனிமேல் நாணம்…
தொடும் போது தேகம் எங்கிலும் ரோமாஞ்சனம்…
இதுதானோ காம தேவனின் பிரேமாயணம்…
சுவையான காதல் கீதமே படித்தாலென்ன…
சுகமான ஆசை ராகமே இசைத்தாலென்ன…
இசையும்… லயமும்… இணைய இணைய… இனிமை…
நினைத்தால்… உனைத்தான்… நினைப்பேன்…
நெஞ்சில்… தமிழாய்… இனிப்பேன்…
நிழல்போல்… தொடர்வேன்…
நினைவாய்… படர்வேன்…
அடடா… அடடா…
இளமை… இளமை… இளமை…
இசை மீதான பெரும் பித்துக்கொண்டவர் தாயன்பன். பல கருவிகளை வாசிக்கத் தெரிந்த மேதை. இவரது இசையில் சொல்வதெல்லாம் உண்மை படத்தில் கண்ணுக்குள்ளே உன்னைக் கண்டேன் கண்ணே மூடாதே என்ற பாடல் பாலசுப்ரமணியம் பாடியது. இதுவும் தாயன்பனின் அகத்தினின்றும் பிறந்து வந்த நல்லிசைப் பாடல்தான்.
தாயன்பன் இசை எழுதுவார், இசையமைப்பார், இசை ஏற்பாடு செய்வார். இசை தலை வழிநடத்தவும் செய்வார். அவருடைய இசையில் அவருடைய மகளுக்குப் பாடல்களும் பாடி இருக்கிறார். ஜெயா ராஜகோபாலன், மால்குடி சுபா, பாப் ஷாலினி, டாக்டர் சுந்தர் ஜியோ ஆகியோரை தாயன்பன் அறிமுகப்படுத்தியிருக்கிறார். டிஎம்எஸ், ஏ.எல்.ராகவன், ஜெயச்சந்திரன், உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், ஜானி ஆப்ரஹாம், பி.சுசீலா, வாணிஜெயராம், பிரம்மானந்தம், ஜமுனாராணி, கே.வீரமணி, ஜிக்கி, சசிரேகா, குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
சிவாஜி நாடக கம்பெனி, வி.எஸ்.ராகவன், சேஷாத்ரி, ஏவிஎம் ராஜன், காஞ்சனா, செந்தாமரை, கோபு, சுந்தரமூர்த்தி ஆகியோரின் குழுக்களில் 20 வருடங்களுக்கு மேலாக இசையமைத்தார். 1989ஆம் ஆண்டு நாடகங்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை மயிலாப்பூர் அகாடமி அவருக்கு வழங்கியது. சங்கீத் எனும் பெயரில் 100 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியிருக்கிறார். தற்போது பல்லவி என்னும் இசைக்குழுவை 25 வருடங்களாக நடத்தி வருகிறார். வாழ்க இசை.
**தொடரலாம்**�,”