ஐபிஎல் போட்டிகளில் சிம்ம சொப்பனமாகத் திகழும் அணிகளில் ஒன்று, மூன்று முறை டைட்டில் வென்ற அணிகளில் ஒன்று (இன்னொரு அணி மும்பை இந்தியன்ஸ்) என எத்தனையோ புகழ் மாலைகளைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமந்திருந்தாலும், சூதாட்டப் புகாரினால் இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட்டு, மீண்டும் டைட்டில் வென்ற தருணம் எப்படிப்பட்டது என்பதை மகேந்திர சிங் தோனி மூலமாகவே சொல்ல வைத்திருக்கிறது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நிறுவனம்.
Roar Of The Lion என்ற பெயரில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ஆவணப்படத்தில் தோனி உள்ளிட்ட சென்னை அணியின் வீரர்கள் பலர் இடம்பெற்றிருக்கின்றனர். மார்ச் 20ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸில் ஒளிபரப்பாகவிருக்கும் ஆவணப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருக்கின்றனர்.
டிரெய்லரில் பேசும் தோனி “நான் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு ஒரு கொலையாக இருக்காது. அது சூதாட்டம் (மேட்ச் ஃபிக்சிங்). அணி சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டு, அதில் என் பெயரும் அடிபட்டது. எங்களுக்கு அது மிகவும் கஷ்டமான காலகட்டம். தண்டனை மிகவும் கடுமையாக இருந்ததாக ரசிகர்கள் நினைத்தார்கள். நாங்கள் மீண்டு வந்தது மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று. நான் எப்போதுமே சொல்வேன். எது உன்னைக் கொல்லாமல் விடுகிறதோ; அது உன்னை வலிமையானவனாக மாற்றும்” என்று தோனி பேசும் காட்சிகளுக்கிடையே, கடுமையான பயிற்சியில் ஈடுபடும் சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா ஆகியோரின் காட்சிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி அணிவகுப்பு விழாவின் காட்சிகளும் காட்டப்படுகின்றன.
விமர்சனங்களில் சிக்கிய அந்த இரண்டு வருடங்களின் வலியைப் பற்றி தோனியும் சென்னை அணியினரும் பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களின் தொகுப்பாக இந்த ஆவணப்படம் இருக்குமென்று எதிர்பார்க்கலாம்.�,”