�
வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1.49 உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுத் துறை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரங்களைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.1.49 உயர்த்தப்பட்டு ரூ.499.51 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.498 ஆக இருந்தது. அதேபோல, மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.30.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் 1 (இன்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.
14.2 கிலோ எடை கொண்ட இந்த சமையல் சிலிண்டர்கள் ஆண்டு ஒன்றுக்கு 12 எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான அரசின் மானியம் மக்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாகச் செலுத்தப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சமையல் சிலிண்டரின் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் சிலிண்டருக்கான அரசின் மானியமும் ரூ.291.48லிருந்து ரூ.320.49 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகள் சிலிண்டர் விலையை உயர்த்தக் காரணமாக இருப்பதால் நுகர்வோரின் சுமையைக் குறைக்க அரசின் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக ஆகஸ்ட் மாதத்தில் சிலிண்டர் மானியம் உயர்த்தப்பட்டிருந்தது.�,