ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி டேட்டா சலுகைகளால் நெட்வொர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் கேபிள் டிவி ஆபரேட்டர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகச் சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச முதலீட்டுச் சேவைகள் நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கேபிள் டிவி இணைப்பு வாயிலாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போரை விட மொபைல் டிவி வாயிலாகப் பார்ப்பவர்களே அதிகம் எனவும், அதுவும் குறிப்பாக ஜியோ டிவி பார்ப்பவர்களே அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏர்டெல் டிவி வாயிலாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களும் கணிசமான அளவில் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி பல்வேறு இலவசச் சலுகைகளுடன் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் இணைப்பை அறிமுகப்படுத்திய பிறகு இதர நெட்வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வழங்கும் ஜியோ பயன்பாடு அதிகரித்துள்ளதால் மொபைல் டிவி வாயிலாகத் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜியோவின் மொத்த சந்தாதார்களில் பாதிக்கு மேலானோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக மொபைல் டிவி வாயிலாகவே பார்ப்பதாகப் பேங்க் ஆஃப் மெரில் லிஞ்ச் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
ஜியோவின் பல்வேறு செயலிகளில் அதிகபட்சமாக ஜியோ டிவி செயலிதான் 73 சதவிகிதம் அளவுக்குச் சந்தாதார்களால் பயன்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜியோ மியூசிக் (60%), ஜியோ சினிமா (42%), ஜியோ சேட் (33%), ஜியோ மணி (32%) உள்ளிட்ட செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஜியோ டிவியைத் தொடர்ந்து ஏர்டெல் டிவியும் அதிகளவு வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. 1 கோடிக்கும் மேலான ஏர்டெல் டிவி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ நெட்வொர்க் டேட்டாவை ஆன்லைன் வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே வாடிக்கையாளர்கள் அதிகளவில் பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஜியோ பயன்பாட்டாளர்கள் 1000 பேரில் சுமார் 750 பேர் ஆன்லைன் வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே ஜியோவைப் பயன்படுத்துவதாக மெரில் லிஞ்ச் ஆய்வில் கூறியுள்ளனர்.�,