�
வனத் துறையினர் எடுத்துக்கொண்ட அக்கறை காரணமாக குட்டி யானை ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நெல்லித்துறையில், நேற்று (டிசம்பர் 13) ஒரு யானை சாலையை வழிமறித்து நின்றது. சாலையில் வந்தவர்கள், வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடினார்கள்.
அவர்கள் போட்டுச் சென்ற இரு சக்கர வாகனங்களை அந்தக் காட்டு யானை சேதப்படுத்தியது. இந்த தகவலைக் கேட்டு அங்கு வந்த வனத் துறையினர், யானையைக் காட்டுக்குள் துரத்த முயன்றனர். ஆனால், காட்டுக்குள் செல்லாமல் அதே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்தது. இவ்வாறு யானை ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த வனத் துறையினர், அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
பவானி ஆற்றின் கரையருகே உள்ள பள்ளத்தில், பிறந்து ஒரு மாதம்கூட ஆகியிருக்காத யானைக்குட்டி ஒன்று தவித்தபடி இருந்தது.
வனத் துறையினர், தாய் யானையைத் துரத்திவிட்டுக் குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட குட்டி யானைக்கு க்ளுகோஸ், இளநீர் உள்ளிட்ட சத்து மிகுந்த பானங்களை அளித்தார்கள். மீட்கப்பட்ட குட்டி யானையை, வனத்துறை ஊழியர் ஒருவர் குழந்தையைப்போல தோளில் சுமந்துசென்று தாய் யானை நின்ற இடத்தின் அருகில் விட்டார்.
வனத் துறையினர் காட்டும் அலட்சியத்தால்தான் யானைகள் அடிக்கடி இறந்துபோகின்றன என்ற குற்றச்சாட்டு பொதுவாக முன்வைக்கப்படுகிறது. உண்மையான அக்கறையுடன் யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பணிசெய்யும் ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் காட்டியுள்ளது.
�,