oகுழந்தைகளின் கண்ணியத்தைக் குலைக்கிறோமா?

Published On:

| By Balaji

நெட்டிசம் – சரா சுப்ரமணியம்

‘சாப்பாடுதான் முக்கியம்’ என்ற சின்னஞ்சிறு வைரல் சிறுவனின் வீடியோ நேர்காணல் ஒன்றை ஃபேஸ்புக்கில் கவனிக்க நேர்ந்தது. செய்தித் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட அந்த மூன்றரை நிமிட வீடியோ பதிவு 27,000 பேரால் பகிரப்பட்டிருந்தது. 1.13 லட்சம் லைக்குகள். 1,200 கமெண்ட்ஸ்.

அந்த வீடியோவுக்கான கமெண்ட்ஸ் பகுதிகளைப் பார்த்தபோது, இரண்டு விதமான பார்வைகளை நெட்டிசன்கள் அழுத்தமாகப் பதிவுசெய்தது தெரிந்தது.

‘இதெல்லாம் ஒரு செய்தியா? நாட்ல வேற முக்கியமான விஷயங்கள் எதுவும் இல்லையா? ஒரு குழந்தைக்குத் தொல்லை கொடுத்து இப்படி ஒரு பேட்டி எடுத்துதான் ஆகணுமா?’ என்கிற ரீதியில் ஒன்று.

‘என்னடா எந்த நியூஸ் போட்டாலும் நாட்டுல எவ்ளோ பிரச்சினை இருக்குதுனு நாலு பேர் கமெண்ட் போட வந்துடுறீங்க?!’ என்கிற ரீதியில் இன்னொன்று.

எல்கேஜி பயிலும் அந்தச் சின்னஞ்சிறுவனின் வீடியோ செய்தியைப் பார்த்தேன். படு கேவலமாக இருந்தது. மூன்று நிமிட வீடியோவுக்காக நிச்சயம் நாள் முழுவதும் அந்தச் சிறுவனைப் படுத்தியிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்தச் சிறுவன் பேசும் சில வரிகள்கூட அவனாகவே சொன்னவை அல்ல; சொல்லிவைத்துச் சொல்லப்பட்டவை என்பதும் புரிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, சில முறை சிகரெட் பிடிப்பது போல் அந்தச் சிறுவன் பாவனை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது கீழ்த்தரமான அணுகுமுறை.

சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவிட்டான் என்பதற்காகவே அந்தச் சிறுவன் குறித்து செய்தி வெளியிட வேண்டும் என்று யோசித்ததே தவறு. அதுவும், ஒரு குழந்தையை மறைமுகமாகத் துன்புறுத்தி வீடியோ செய்தி பதிவு செய்ததுடன், அதன் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் காட்சிகளை ஒளிபரப்பியதை என்ன சொல்லித் திட்டித் தீர்ப்பது?

**ஊடகவியாளர்களின் பங்களிப்பு**

யுனிசெஃப் இந்தியா அமைப்பும், தோழமை இயக்கமும் இணைந்து ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்குச் சமீபத்தில் ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்தியது. யுனிசெஃப் இந்தியா அமைப்பின் சுகத்தோ ராய், தோழமை இயக்கத்தின் தேவநேயன் உள்ளிட்டோர் வழிநடத்திய அந்தப் பயிற்சிப் பட்டறை மூலம் குழந்தைகள் தொடர்பான செய்திகளை அணுகும் முறைகளைப் பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஒருவேளை அதுபோன்ற பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு, சரியான புரிதல்களை மேம்படுத்திக் கொண்டிருந்தால், மேற்குறிப்பிட்ட வீடியோ செய்தியைச் சம்பந்தப்பட்ட செய்தியாளர்களும், பொறுப்பாசிரியர்களும் தவிர்த்திருக்கக்கூடும்.

குழந்தைகள் குறித்து எழுதுவது, குழந்தைகளின் படங்களை வெளியிடுவது, குழந்தைகளின் வீடியோக்களை வெளியிடுவது போன்றவை முதன்மைச் செய்தி ஊடகங்களை விடவும் சமூக வலைதளங்களில்தான் இப்போது அதிகம் பகிரப்படுகின்றன எனும் நிலையில், பத்திரிகையாளர்களைப் போலவே நெட்டிசன்களுக்கும் இது குறித்த புரிதல்கள் அவசியம் எனக் கருதுகிறேன்.

மழலைகள் பேச்சுகள் தொடங்கி குழந்தைகளின் குறும்புத்தனங்கள் கொண்ட எத்தனையோ சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகின்றன. அப்படி வைரல் ஆகும் வீடியோவின் தன்மை குறித்து கொஞ்சம் யோசித்தாலே போதும், அதை மென்மேலும் வைரல் ஆக்கும் வகையில் பகிர்வதா அல்லது அதைத் தவிர்க்க வேண்டுமா என்பதை எவரும் எளிதில் முடிவு செய்துவிடலாம்.

சமீபத்திய குறிப்பிடத்தக்க வைரல் வீடியோக்களை எடுத்துக்கொள்வோம். ‘குணமா வாயில சொல்லணும். திட்டாம, அடிக்காம வாயில சொல்லணும்!’ என்று கண்ணீருடன் ஒரு குழந்தை பேசியது. அது ஆக்‌ஷன் அல்ல. ரியாக்‌ஷன். உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தப்பட்டதற்கான குழந்தையின் எதிர்வினை அது. ‘சாப்பாடு முக்கியம்’ குழந்தையும் அழுதபடிதான் சொல்கிறான். அதுவும் ஆக்‌ஷன் அல்ல; ரியாக்‌ஷன்தான். அந்தச் சிறுவன் வேடிக்கைக்காகத் துன்புறுத்தப்படுகிறான் என்பதைக்கூட அதைப் பகிர்பவர்கள் யோசித்துப் பார்க்கவில்லை.

சமூக ஊடகம் கட்டற்றது. உணர்வுபூர்வ ஆதிக்கம் மிகுந்தது. அங்கு வைரல் ஆகிறது என்பதற்காகவே, நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துக்காக அதுபோன்ற விஷயங்களை முதன்மைச் செய்தி ஊடகங்கள் ஊக்கப்படுத்துவது சரியானதா?

எங்கோ ஒரு மூலையில் வீடியோ மூலம் பதிவாகி, சமூக ஊடகங்களில் எசகுபிசகாக வைரலானதன் விளைவால், அந்தக் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து நேர்காணல் எடுத்து வெளியிடுவதும், அந்தக் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையைச் செய்தியாகச் சேகரித்து வெளியிடுவதும் தேவைதானா?

இவ்வாறு செய்தி ஊடகங்கள் செய்யும்போது, பிரபலம் அடைவதில் வேட்கை கொண்ட மக்கள் தங்கள் குழந்தைகளை மென்மேலும் துன்புறுத்தி இதுபோன்ற வைரல் வீடியோக்களைச் செயற்கையாக உற்பத்தி செய்வதில் ஈடுபடத்தானே செய்வார்கள்? இதுபோன்ற தவறான போக்கைத் தூண்டுவதும் தவறுதானே?

**செய்திகளும் தாக்கங்களும்!**

இது போராட்டங்களின் காலம். நம் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் போராட்டம் என்பது நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இந்தச் சூழலில், மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் முதல் வரிசையில் குழந்தைகளைப் பார்க்க முடிகிறது. போராட்டங்கள் தொடர்பான செய்திகளில் குழந்தைகளை மையப்படுத்திய புகைப்படங்களையும் வீடியோக்களையும் அதிகம் காண முடிகிறது. உண்மையில், போராட்டங்கள் மீதான தாக்கத்தைக் கூட்ட இது உறுதுணை புரியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு போராட்டம் குறித்த எவ்வித புரிதலும் இல்லாத குழந்தைகளைப் போராட்டங்களில் கலந்துகொள்ள வைப்பது ஒருவிதத்தில் கட்டாயப்படுத்துவதுதானே என்ற கேள்வி எழுகிறது.

எந்தப் போராட்டத்தில் எவ்விதமான வன்முறை வெடிக்கும் எனக் கணிக்க முடியாது. போராட்டங்களை ஒடுக்குவதில் அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த எல்லைக்கும் செல்வதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதற்கு, ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் பறிக்கப்பட்ட உயிர்களே சாட்சி.

இத்தகைய பின்புலத்தில், “போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தவறுதான். குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான அவர்களது பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படலாம் என்ற வகையில், இந்தப் போக்கை நிச்சயம் தவிர்க்க வேண்டும்” என்கிறார் தோழமை இயக்கத்தின் தேவநேயன்.

இதுதொடர்பான விவாதங்கள் ஒருபுறம் இருக்க, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளின் அடையாளங்களை அறிந்தோ, அறியாமலோ பொதுவெளியில் வெளியிடுவது அதிகரித்திருப்பது கவனத்தில்கொள்ள வேண்டிய மிக முக்கிய பிரச்சினை.

**ஜம்முவும் சிரியாவும்**

பாலியல் துன்புறுத்தலுக்கும், வன்கொடுமைகளுக்கும் ஆளாகும் குழந்தைகள் சிறுமியாக இருந்தாலும் சரி, சிறுவனாக இருந்தாலும் சரி, அவர்களது பெயர், பள்ளி உள்ளிட்ட அடையாளங்களை மறைத்துதான் செய்தி வெளியிட வேண்டும் என்பது இதழியல் விதிமுறை. குறிப்பாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்களது புகைப்படங்களை வெளியிடக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம்.

ஜம்மு – கத்துவாவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அறிவோம். பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருந்தால், அவர்களின் படங்களைச் செய்திகளில் வெளியிடுவதில் பிழையில்லை. அதேவேளையில், கொல்லப்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தால், அவர்களது படங்களை ஊடகங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், சில ஊடகங்கள் அந்தச் சிறுமியின் படத்தை வெளியிட, அது பெரும் தாக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரல் ஆனது. இங்கு நம் அக்கறையும் கோபமும் அந்தச் சிறுமியின் கண்ணியத்தைக் காக்கத் தடையாகிவிட்டன.

ஒரு சில ஊடகங்கள் சரியான தெளிவின்றி, நமக்குக் கிடைத்துவிட்டது என்பதாலேயே பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் படங்களை வெளியிட்டுவிடுகின்றன. அது ஏதோ ஒரு வகையில் சமூக வலைதளத்துக்குள் வந்துவிடுகிறது. முதன்மைச் செய்தி ஊடகங்கள் தக்க விதிமுறைகளைப் பின்பற்றி அதுபோன்ற குழந்தைகளின் படங்களை வெளியிடுவதைத் தவிர்த்தாலும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுப் பரவலாக்கப்பட்டு விடுகிறது. எனவே, இதையும் நெட்டிசன்கள் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.

செய்திப் புகைப்படங்கள்தான் மக்களிடமும் ஆட்சியாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனினும், குழந்தைகள் என்று வரும்போது, கூடுதல் கவனம் முக்கியம். நாம் பயன்படுத்துகிற விதத்தில் கவனத்துடன் செயல்பட்டால், நிச்சயம் தேவையான இடங்களில் தாக்கத்தைக் கொண்டுவர முடியும்.

இதற்கு ஓர் உதாரணத்தைச் சுட்டிக்காட்டிய யுனிசெஃப் இந்தியா அமைப்பின் சுகத்தோ ராய், சிரியாவைச் சேர்ந்த சிறுவனின் புகைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விவரித்தது இங்கே பதியத்தக்கது. சிறுவன் அய்லான் துருக்கிக் கடற்கரையில் கரையொதுங்கிக் கிடந்த புகைப்படம் உலகின் மனசாட்சியை உலுக்கியது. அந்தப் புகைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், அதுவரை அகதிகள் நுழையாமல் மூடப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்பட்டன. அந்தப் படங்களை நன்றாகக் கவனித்தால் ஒரு விஷயம் பிடிபடும். பல கோணங்களில் பரவிய அந்தப் புகைப்படங்களில் ஒன்றில்கூட அந்தச் சிறுவனின் முகம் முழுமையாகத் தெரியாது. அதுதான் கச்சிதமான அணுகுமுறை.

குழந்தைகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் நெட்டிசன்கள் அணுகுவது குறித்து இப்போது பேசுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதுதான், ‘டிக் டொக்’ ஏற்படுத்திய வீடியோ புரட்சி. கவன ஈர்ப்புக்காக, வைரல் நோய்ப் பரவலுக்காகக் குழந்தைகளை ‘டிக் டொக்’கில் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

**நாம் என்னதான் செய்ய முடியும்?**

பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் நேரடியாகப் பகிரும்போதும், கண்ணில்படுவதைப் பகிர முனையும்போதும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனத்தில் நிலைநிறுத்திக் கொண்டாலே போதும். இதழியல் விதிமுறைகளில் முதன்மையானதாகவும், குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்களின் வலியுறுத்தலாகவும் விளங்கும் அந்த விஷயம்:

**‘ஒவ்வொரு சூழ்நிலையிலும் குழந்தைகளின் கண்ணியமும் உரிமைகளும் காக்கப்பட வேண்டும்’.**

(கட்டுரையாளர் **சரா சுப்ரமணியம்** பத்திரிகையாளர், சினிமா ஆர்வலர். இவரைத் தொடர்புகொள்ள: fb.com/saraa.subramaniam)

[நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்!](https://minnambalam.com/k/2019/02/28/18)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share