இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கிவி பழங்களின் அளவை அதிகரிக்க சிலி நாடு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து சிலி நாட்டின் பழங்கள் ஏற்றுமதியாளர் சங்கத்தின் சந்தைப்படுத்துதல் இயக்குநர் சாரிஃப் கிறிஸ்டின் கார்வாஜல் ‘தி இந்து’ ஊடகத்திடம் பேசுகையில், “2017ஆம் ஆண்டில் கிவி பழங்கள் ஏற்றுமதி வாயிலாக 188 மில்லியன் டாலர் வரை வருவாயை சிலி ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டு சிலி நாடு இந்தியாவோடு முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தில் (preferential trade agreement) கையெழுத்திட்டது. 2017-2018ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு மொத்தம் 5300 டன் அளவிலான கிவி பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நடப்பு பருவத்தில் ஜூலை 11ஆம் தேதி வரை மொத்தம் 8000 டன் அளவிலான கிவி பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சிலி நாடு தென் துருவத்தில் இருப்பதால் மற்ற நாடுகளைப்போல் இல்லாமல் மார்ச் முதல் அக்டோபர் வரை கிவி பழங்கள் விளையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பொருட்களைச் சந்தைப்படுத்த இந்தியா சிலிக்கு முக்கிய சந்தையாக உள்ளது. கிவி பழங்களைத் தொடர்ந்து பெர்ரி பழங்கள், விதைகள், கடல் உணவுகள் போன்றவற்றையும் விநியோகம் செய்யப்போவதாக அவர் கூறியுள்ளார். சிலியிலிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 80 சதவிகிதத்திற்கும் மேல் தாமிரமும் (காப்பர்), 10 சதவிகிதம் வரை உணவு மற்றும் பானங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்று டெல்லியில் உள்ள சிலி தூதரகத்தின் வர்த்தக ஆணையரான கரோலினா வஸ்குஸ் கூறியுள்ளார். இந்தியர்களிடையே ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு பெருகி வருவதால் கிவி பழங்கள் பலதரப்பு மக்களிடையே பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,