Oகிச்சன் கீர்த்தனா: நெய் சாதம்

Published On:

| By Balaji

புனிதமான இந்த ரமலான் மாதத்தில் செய்யப்படும் இஸ்லாமிய உணவு என்றாலே எல்லோருக்கும் பிரியாணிதான் சட்டென்று நினைவுக்கு வரும். பிரியாணியையும் தாண்டி ருசியில் பட்டையைக் கிளப்பும் சைவ, அசைவ உணவுகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்று இந்த நெய் சாதம்.

**என்ன தேவை?**

நெய் – 4 டீஸ்பூன்

முந்திரி – 15 முதல் 20 பருப்புகள்

உலர் திராட்சை – 50 கிராம்

பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)

பிரியாணி இலை – 2

பட்டை – 2

அன்னாசிப்பூ – ஒன்று

லவங்கம் – 4

ஏலக்காய் – 3

இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்)

பாஸ்மதி அரிசி – அரை கிலோ

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியைச் சூடாக்கவும். பின்னர் அதில் சிறிது நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதேபோல ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி அதை அதே நெய்யில் மொறுமொறுவென பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு நெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ, இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போன்றவற்றை வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய மற்றொரு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்பு ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விடவும். (இரண்டு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்கிற அளவு சரியானது). பிறகு தேவையான உப்பைச் சேர்த்துக் கிளறிவிடவும். பின்பு குக்கரை மூடி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். குக்கரைத் திறந்த பின்பு அதில் வறுத்த முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை மற்றும் பொன்னிறமாக வறுத்து வைத்திருக்கும் வெங்காயத்தைச் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை மேலே தூவி அழகு செய்தால் சுவையும் மணமும் நிறைந்த நெய் சாதம் தயார்.

[நேற்றைய ரெசிப்பி: வெள்ளை குருமா!](https://minnambalam.com/public/2020/05/13/3/kitchen-keerthana-vellai-kuruma)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share